ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மன்றில் 26 மனுக்கள் - மீண்டும் விசாரணை ஆரம்பம்
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில், திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முன்மொழிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 26 மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று(09.11.2026) மீண்டும் தொடங்கிய வேளையிலேயே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிய சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்
இந்தத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் “குழு நிலை(Committee Stage)” விவாதத்தின் போது முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்ட சட்டமா அதிபர், அந்தத் திருத்தங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்காகச் சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனுக்கள், தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் அச்சலா வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன்னிலையில் விசாரிக்கப்படுகின்றன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், இந்த மசோதாவில் உள்ள சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி மொத்தம் 26 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மீண்டும் ஆரம்பிக்கப்படும் விசாரணை
அக்டோபர் 06 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் குறித்து மனுதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, நவம்பர் 04 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர்.
அன்றைய தினம் இடம்பெற்ற விசாரணை இரவு வரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த தங்கள் எழுத்துமூல வாதங்களை நவம்பர் 05ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.