யாழில் இளைஞனைத் தாக்கிப் பணம் பறித்த நபருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கிப் பணத்தைப் பறித்துச் சென்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியங்காடு சந்தைக்கு அருகில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக நின்றிருந்த நபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள வங்கி தானியக்க இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர்களிடம் தொடர்ச்சியாக அச்சுறுத்திப் பணம் கேட்டு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரிடமும் அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
தீவிர விசாரணைகள்
அதற்கு அந்த இளைஞர் பணம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பின்னர் அது கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் குறித்த நபர் இளைஞரைத் கடுமையாகத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்றுள்ளார்.

பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்திருக்க இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கிவிட்ட கோப்பாய் பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்று, சந்தேகநபரை வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.