இன்னும் 3 நாட்களில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளை அண்மித்து நவம்பர் 11ஆம் திகதி வளிமண்டல குழப்பம் உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலை நவம்பர் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாகவும், நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று(08.11.2026) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும்.
அத்துடன், கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 கிலோ மீற்றராக காணப்படும் என்றும் இடியுடன் கூடிய மழையின்போது இது 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடல் சார் தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மாறிவரும் வானிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.