பல மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய ஹட்டன் பிரதான வீதி போக்குவரத்து
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருந்த இடத்தில், நேற்று மாலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி வீதிகளுடான பொதுப் போக்குவரத்து பல மணித்தியாலங்களுக்கு முற்றாகத் தடைப்பட்டது.
மண்சரிவு காரணமாக வீதியில் மண், கற்கள் மற்றும் மரங்கள் கொட்டிக் கிடந்த நிலையில், அவ்வழியாக பயணித்த வாகனங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தினர்.
உடன் நடவடிக்கை
இதனையடுத்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நோர்வூட் வீதி போக்குவரத்து அதிகார சபையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து வீதியில் விழுந்திருந்த மண், கற்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணிகளைத் தொடர்ந்து, குறித்த வீதியூடான போக்குவரத்து நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
எனினும், ஹட்டன் உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், குறித்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தொடர் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளிலும் ஏனைய வீதிகளிலும் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




