நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் : நாமல் எம்.பி
சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து, நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதும், குறிப்பிட்ட சிலரைக் கைது செய்யப்போவதாகக் கூறுவதும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், வாக்குறுதியளித்தபடி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்களை விநியோகிக்கவோ, நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கவோ அரசாங்கத்தால் முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை முறையான திட்டமிடலின்றிச் செயற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற விசாரணைகள் குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி நிலைமை குறித்துப் பேசிய அவர், குடிநீர்த் பற்றாக்குறை மற்றும் விவசாய நிலங்களுக்கான நீர் மேலாண்மை தொடர்பில் அரசாங்கம் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க முற்படுவதை நிறுத்திவிட்டு, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.