புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நுணுக்கமான முறையில் திருடப்பட்ட பை - சிசிடிவியில் சிக்கிய சில நிமிடங்களில் கைது
கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் கையில் தடியுடன் அங்கும் இங்கும் நடமாடியுள்ளார். பின்னர், அங்கிருந்த கதிரையொன்றில் அமர்ந்த குறித்த நபர், பயணி ஒருவரின் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
குறித்த நபரின் நடவடிக்கைகள் அனைத்தும் பெட்டா பேருந்து நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செயல்பாட்டு மையத்திலிருந்து இயக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்
இதனையடுத்து, பையை எடுத்துக்கொண்டு நகர்ந்த சந்தேக நபரை, பணியில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பின்தொடர்ந்து சென்று சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் உடனடியாக அவதானிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபர் விரைவாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 'தூய்மையான இலங்கை' முன்முயற்சியின் கீழ் புதிதாக நவீனமயமாக்கப்பட்ட செயல்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் இயங்கும் கமராக்கள்
இந்தக் கண்காணிப்பு வலையமைப்பு 24 மணி நேரமும் இயங்குவதுடன், பேருந்து நிலையத்திற்குள் இடம்பெறும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருட்டு மற்றும் பிக்பாக்கெட் போன்ற குற்றச் செயல்களைக் கண்டறிவது மட்டுமன்றி, பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு, விபத்துகள் மற்றும் உடனடி உதவி தேவைப்படும் அவசரநிலைகளில் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கண்காணிப்பு அமைப்பு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening