போகம்பர சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு! சிறப்பு அறையிலிருந்து தப்பிக்கும் கைதிகளின் திட்டம் தோல்வி
கண்டி - பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் சிறப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் இரும்பு கம்பிகளை உடடைத்து தப்பிக்க முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சிறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இணைந்து இந்த முயற்சியை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறை அறைகளில் உள்ள இரும்புக்கம்பிகளை சாமர்த்தியமாக அறுக்க முயன்றதாக கைதிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றம்
மேலும், அந்த அறையில் இரும்புக்கம்பிகளை அறுக்க பயன்படுத்தப்பட்ட பிற உபகரணங்களையும் சிறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இதற்கமைய, சிறை நிர்வாகம், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை வெலிக்கடை சிறைக்கும், மற்ற கைதிகளை அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சிறை அறையில் இரும்புக்கம்பிகளை வெட்டுவதற்காக இந்த கைதிகள் சிறிய ஆயுதங்களை எவ்வாறு பெற்றனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதிகளின் தப்பிக்கும் முயற்சிக்கு சில சிறை அதிகாரிகளும், மேலும் பல கைதிகளும் உதவி செய்தார்களா என்பது குறித்து தற்போது விசாரித்து வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
YOU MAY LIKE THIS VIDEO