திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
புதிய இணைப்பு
காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே இன்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (23) காலை காணாமல்போனதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திலிருந்து 3 வகையான மருந்துகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அந்த மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
காணாமல்போனதாக கூறப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் உள்ள பாறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிர தேடுதல்
அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக இன்று (24) அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், வைத்தியரின் உடலுக்கு அருகில் ஒரு வகை மருந்து, மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முதலாம் இணைப்பு
பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை பணியில் இருந்ததன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணிபுரியும் கண்டியை சேர்ந்த திருமணமான வைத்தியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
கார் கண்டுபிடிப்பு
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், அந்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச்செல்வது பதிவாகியுள்ளது.

இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் உள்ள 17வது தூண் பகுதியில் நேற்றிரவு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக, பொலிஸார், குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
you may like this video