வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்க முடியும்! கூட்டமைப்பு
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் 1981ம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ம் பிரிவின் படி, நாடாளுமன்றம் நாளை (16) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
1981ம் ஆண்டின் 2ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 4வது பிரிவின்படி, வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் நாடாளுமன்றம் மூன்று நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும்.
இதனால், மேற்படி சட்டத்தின் 5வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதாக பொதுச் செயலாளர் நாளை (16) அறிவிக்க உள்ளார்.
20ம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்
இதேவேளை, இன்று முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் முன்னர் தீர்மானித்தபடி எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் 19ம் திகதி செவ்வாய்கிழமை வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தேர்தலின் பின்னர் ஜனாதிபதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்டமைப்பிற்குள், எவ்வித இடையூறும் இன்றி இந்த செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.