ஜனாதிபதி தெரிவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி நிச்சயம்! ஜீ.எல்.பீரிஸ் உறுதி
ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் இருப்பதால், கட்சி என்ற ரீதியில் அக்கட்சியின் வேட்பாளருக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டுமே தவிர ஏனைய வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்படக்கூடாது என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக டலஸ் அழகப்பெரும ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், அவர் மிகவும் பொருத்தமானவர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேறு எந்த வேட்பாளரையும் ஜனாதிபதி பதவிக்கு ஆதரிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையே குழுப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதுடன்,
கட்சி இரண்டாகப் பிளவடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.