மொட்டுக்கட்சியின் முடிவால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்: லக்ஷ்மன் கிரியெல்ல
மக்களின் அபிலாஷைகளை எட்டி உதைத்து விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்து, நாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள் உட்பட சமய தலைவர்களின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்து வருகிறது.
இணங்க மறுக்கும் அரசாங்கம்
அரசாங்கம் இதற்கு இணங்காத காரணத்தினால், பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பகிர்ந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுடன் நேற்று ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தற்போது சீர்குலைந்துள்ளது.
கடந்த சில தினங்களில் எதிர்க்கட்சிகள் இது சம்பந்தமாக இணக்கப்பாட்டுக்கு வந்து, இந்த முடிவை இன்று சபாநாயகருக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் சிலரது நிலைப்பாடு மாறியதால், இந்த குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் கிரியெல்ல கூறியுள்ளார்.