மட்டக்களப்பில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு தினம்: பொலிஸ் விசாரணையால் பதற்றநிலை (Photos)
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு தினத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடாத்திய நிலையில் அங்கு வந்த பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகள் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டது.
தமிழர் விடுதலைப்போராட்டத்தில் முதல் தற்கொலை போராளியாக அடையாளப்படுத்தப்பட்ட பொன்.சிவகுமாரனின் நினைவு தினம் இன்று மட்டக்களப்பு வவுணதீவு - குறிஞ்சாமுனை பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுஷ்டிக்கப்பட்டது.
காணொளி பதிவு செய்த பொலிஸார்
இந்த நினைவு தினம் நிறைவுபெற்ற வேளையில் அங்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த நிகழ்வுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், நிகழ்வில் நின்றவர்களையும் கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவுசெய்தனர்.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மற்றும் இளைஞர் அணித்தலைவர் இ.சத்தியசீலன் ஆகியோர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைப்புலிகள் உறுப்பினர் நினைவுகூரப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இதன்போது பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபர் எந்த விடுதலை இயக்கத்தினை சேர்ந்தவரும் இல்லையெனவும் அவர் மாணவர் ஒன்றிய தலைவராகச் செயற்பட்டு தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர் எனவும் இதன்போது பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு
எனினும் யாழில் உயிரிழந்த ஒருவரை இங்கு ஏன் அனுஷ்டிக்கின்றீர்கள் என்ற கேள்விகளைக் கேட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஊடகவியலாளர்களிடமும் நீங்கள் யார் அழைத்துவந்தீர்கள் என்ற கேள்வியும் பொலிஸாரினால் கேட்கப்பட்டது.
இதன்போது தாம் தனியொரு கட்சியெனவும் உயிரிழந்த ஒருவரை நினைவுகூரும் உரிமையுள்ளது எனவும் அதனை யாரும் தடுக்கமுடியாது எனவும் இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்ததுடன், பொலிஸார் அங்கிருந்துசென்றனர்.



