அநுர ஆட்சியில் 1.89 பில்லியன் டொலர்களாக உயர்ந்த கடன்தொகை - திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு
1971 மற்றும் 1988/1989 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புகளைச் சீரழித்தவர்கள், இன்று பொருளாதாரத்தைச் சீரமைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(10.09.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
1.89 பில்லியன் டொலர்களாக கடன்தொகை அதிகரிப்பு
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
2026 மார்ச் மாதமளவில் நாட்டின் கடன் சுமை 3,198 பில்லியன் ரூபாவாகவும், அதில் வெளிநாட்டுக் கடன் மட்டும் 1.89 பில்லியன் டொலர்களாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடன் வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஆட்சிக்கு வந்த கடந்த 24 மாதங்களில் 76 ஆண்டுகால வரலாற்றை விட வேகமான விகிதத்தில் பெருமளவு கடன்களைப் பெற்று நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.

கடந்த கால அரசுகள் கடன் பெற்று மகாவலி, நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி மற்றும் மின்சார உற்பத்தி போன்ற பெரிய அளவிலான அபிவிருத்திகளைச் செய்தன. ஆனால், தற்போதைய அரசு அத்தகைய எந்தவொரு புதிய வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி
பெறப்படும் கடன்களாலும் அத்தியாவசியப் பொருள்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளாலும் திறைசேரி நிரப்பப்படுகின்றது. பால்மா, கோதுமை மா மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதால் பொதுமக்கள் மீது தாங்க முடியாத பொருளாதாரச் சுமை திணிக்கப்பட்டு, தனிநபர் கடன் வீதம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையை, ஊழல் நிறைந்ததாகச் சித்தரித்து பலவீனப்படுத்த அரசு முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தனியார் துறை மீது குறைகூறுவதற்கு முன், நுரைச்சோலை நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் மற்றும் 325 கொள்கலன்கள் வரியின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் போன்ற அரச துறை சார்ந்த ஊழல்களையே அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
22 ஆவது திருத்தத்தின் உள்நோக்கம் இதுவே..
கடந்த 76 ஆண்டுகளாக நாட்டில் 'கறுப்புப் பொருளாதாரம்' மட்டுமே இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுவது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
1948இல் சுதந்திரம் அடைந்தது முதல் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆடைத் தொழில் ஆகியவற்றில் நாடு அடைந்த பிரமாண்ட வளர்ச்சியே இன்றுவரை நாடு செயற்படக் காரணம். 1971 மற்றும் 1988/89 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் பேருந்துகளையும் தீக்கிரையாக்கிப் பொருளாதாரத்தைச் சீரழித்த வரலாற்றைக் கொண்டவர்களே இன்று பொருளாதாரத்தைச் சீரமைப்பதாகப் பேசுகின்றனர்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது நீதிமன்றங்களின் வழக்குத் தாமதத்தைக் குறைப்பதற்கோ மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ கொண்டுவரப்படவில்லை.
இது அரசின் இருப்பைப் பாதுகாக்கவும், நீதித்துறையின் அதிகாரத்தில் தலையிடவுமே கொண்டுவரப்படுகின்றது. கீழ் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்க உயர்மட்ட நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மட்டும் அதிகரிப்பது உள்நோக்கம் கொண்டது.
எனவே, பொய்ப் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, மாகாண சபைத் தேர்தலையோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பையோ நடத்தி மக்கள் தீர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டும் என்றார்.