விசா ஒப்பந்தத்தில் சிக்கபோகும் ரணில் அரசின் முக்கிய புள்ளி
சர்ச்சைக்குரிய இலத்திரனியல் -விசா முறைக்கேட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலத்திரனியல் -விசா வழங்குவதை நிறுத்திவிட்டு, பழைய முறையைப் பயன்படுத்தி விசாக்களை மீண்டும் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு செய்த வழக்கில் ஹர்ஷ இலுக்பிட்டிய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களம் பொதுபாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற நிலையில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சரையும், அப்போதைய செயலாளரையும் குறிப்பிட்டு சில ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இலத்திரனியல் விசா விநியோக சர்ச்சை
இலத்திரனியல் - விசா விநியோக சர்ச்சையில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸும் சிக்குவாரா என கேள்வியெழுப்பியுள்ளன.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலத்திரனியல் விசா நடைமுறையில் இருந்த சிக்கல்கள் தொடர்பில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் டிரான் அலஸ் பல கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.
இதன் பின்னணியிலேயே டிரானுக்கும் இலத்திரனியல் - விசா சர்ச்சைக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதன்படி பிரதிவாதியான குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தண்டனை விதிக்கும் உத்தரவு இந்த மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த கேள்விகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.