2 மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு இருந்தும் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம்
சமகாலத்தில் 2 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இருந்தால், ஏன் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதற்கு பதிலளித்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருணா, 2 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக கூறுவது தவறு.
அது நாட்டிலுள்ள எரிபொருள் இருப்பு பற்றியது அல்ல, சான்றளிக்கப்பட்ட ஓடர்களை பற்றியதாகும்.
எரிபொருள் கொள்வனவு
இதன் மூலம் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு அதனை தொட்டிகளில் நிரப்பி வைத்திருப்பதாக அர்த்தம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தொகை எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு தொகை ஓடர் செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகை கப்பல் மூலம் இலங்கைக்கு வந்துக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் எரிபொருள் இருப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை கருத்திற் கொண்டே 2 மாதங்களுக்கு நாட்டில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென்பதனையே கூறியிருந்தோம்.
எரிபொருள் விலை
எனினும் எரிபொருள் கிடைப்பது மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் சம்பந்தம் இல்லை. சர்வதேச சந்தையின் விலைக்கமைய எரிபொருள் கொண்டு வரப்படும் போது அதன் விலை மாற்றமடையும்.
மீண்டும் அடுத்த தொகை வரும் போது விலையில் மாற்றம் ஏற்படலாம். ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.