வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது (Photos)
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (21.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
விசேட போதைப்பொருள் ஒழிப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கு அமைய வவுனியாவில் நேற்று (21.12) இரவு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்ட்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |