சுற்றுலாப் பயணிகளிடம் பண மோசடி செய்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது
சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஒரு லட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த சொகுசுக் கப்பலில் இருந்து கொழும்பு நகரை சற்றுநேரம் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் குறித்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த பிறகு, காலி முகத்திடல் மற்றும் கங்காராமய விகாரை உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கியதாக கொழும்பு நகரைச் சற்றுநேரம் சுற்றி வருவதாக இரண்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
மோசடி
அதற்காக 18 ஆயிரம் ரூபா கட்டணத்தை முச்சக்கர வண்டி சாரதி கேட்டபோது சுற்றுலாப் பயணிகள் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
பயணத்தின் இடைவழியில் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் ஏ.ரி.எம்மில் இருந்து பணம் எடுப்பதற்காக தனது வங்கி அட்டையை முச்சக்கர வண்டி சாரதியிடம் கொடுத்துள்ளார்.

குறித்த சாரதி ஒப்புக்கொண்ட தொகைக்கு பதிலாக, இரண்டு முறை தலா 90 ஆயிரம் ரூபா வீதம், மொத்தம் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடியாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டி சாரதியிடம் அது குறித்துக் கேட்டபோது, அந்த முழுத் தொகையும் பயணத்திற்கான கட்டணம் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரத்திலேயே தங்கள் உல்லாசக் கப்பலுக்குத் திரும்பவிருந்ததால், துறைமுகத்தில் பணியில் இருந்த சுற்றுலா பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.

பின்னர் பொலிஸார் அந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரைக் கண்டுபிடித்து, அவரிடமிருந்து ஒரு லட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மீட்டு, அவரைக் கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் பணம் அவர்களது தூதரகம் மூலம் திருப்பித் தரப்படும் என்று குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸார் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.