திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 65 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஹேரத் ஹாமிக்கே விஜேரத்ன என்ற 65 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேலதிக விசாரணை
நேற்று (24. 05.2026) மாலை ஒட்டிச்சான்குளம் பகுதிக்கு தேன் சேகரிப்பதற்காகச் சென்ற போதே, அங்கு திடீரென தோன்றிய காட்டு யானை இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

யானை தாக்குதலுக்குள்ளானவரை மாலை 3.55 மணியளவில் கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.