காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்: 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் இஸ்ரேலியப் படைகள் நேற்று(21.01.2026) நடத்திய தாக்குதல்களில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய காசாவின் நெட்சாரிம் (Netzarim) பகுதியில் எகிப்திய நிவாரணக் குழுவின் பணிகளை ஆவணப்படுத்திக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள் கொலை
உயிரிழந்த ஊடகவியலாளர்கள், முகமது கெஷ்டா (Mohammad Qeshta), அப்துல் ரவூப் ஷாத் (Abdul Ra’ouf Shaath) மற்றும் அனஸ் குனைம் (Anas Ghunaim) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் எகிப்திய காசா நிவாரணக் குழுவிற்காகப் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் கூறுகையில், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் ட்ரோன் (Drone) மூலம் உளவுத் தகவல்களைச் சேகரித்ததால் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வாகனம் நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவது இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஏற்கனவே தெரியும் என எகிப்தியக் குழு தெரிவித்துள்ளது.
மற்றொரு தாக்குதலில், மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலா (Deir el-Balah) பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதல்
தெற்கு காசாவின் பானி சுஹைலாவில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அன்று நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளதாகப் பாலஸ்தீனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடும் குளிருக்கு மத்தியிலும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காசாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதால் அங்குள்ள 22 லட்சம் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri