லிந்துலையில் மண்மேடு சரிந்து மூன்று வீடுகள் சேதம்: அச்சத்தில் வாழும் மக்கள்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் இரண்டு வீடுகள் எந்நேரமும் சரிந்து விழக்கூடிய அபாய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 40 அடி உயரத்தில் அமைந்திருந்த மண்மேடு, அதிகாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென வீடுகளின் பின்புறமாக சரிந்து விழுந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இழப்பீட்டு தொகை குறிப்பிடாமல் கடிதத்தில் கையொப்பம் வாங்க முயற்சி - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம்
பாரிய உயிரிழப்பு
இந்த திடீர் மண்சரிவினால் வீடுகளின் பின்புற சுவர்கள் இடிந்து சேதமடைந்ததுடன், சில வீடுகளின் கூரைகளும் பகுதியளவில் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீடுகளில் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட பெரும் சத்தத்தைத் தொடர்ந்து வெளியேறியதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சில நொடிகள் கூட தாமதமாகியிருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
அபாயம்
வீடுகள் கடுமையாக சேதமடைந்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவில்லை என்பது கவலைக்கிடமான விடயமாகும்.

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதே வீடுகளிலேயே சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளர்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்மேடு மேலும் சரிந்து விழக்கூடிய அபாயம் நீடித்து வருவதாகவும், ஒவ்வொரு மழை பெய்யும் தருணத்திலும் உயிரை பணயம் வைத்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.


