பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ (Protection of the State from Terrorism) என்ற புதிய சட்டமூலம் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் மக்களையும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை இந்தச் சட்டமூலம் முன்வைக்கிறது.
கைது செய்தல்
நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் இடம்பெறும் குறிப்பிட்ட குற்றச் செயல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நிலப்பரப்பையோ அல்லது மக்களையோ பயன்படுத்தி, நாட்டிற்கு வெளியே பயங்கரவாதச் செயல்களுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாதச் செயல்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய குற்றங்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிதல், அடையாளம் காணுதல், கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வர்த்தமானி வெளியீடு
மேலும், சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணை, வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலத்தின் முக்கிய அம்சமாக, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், முன்மொழியப்பட்ட சட்டமாகப் பரிசீலிக்கப்படுவதற்காக தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.