ATM இயந்திரத்தில் இருந்து திடீரென வெளியில் வந்த பல இலட்சம் ரூபாய் - இளைஞனின் நேர்மையான செயல்
கம்பகா, நிட்டம்புவ பகுதியிலுள்ள புதிய வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அரசு வங்கி கிளையின் பண வைப்பு இயந்திரத்தில் இருந்து தானாகவே 8,44,000 ரூபாய் பணம் வெளியே வந்துள்ளது.
அந்தப் பகுதியை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் வங்கி முகாமையாளரிடம் அந்த பணத்தை ஒப்படைத்து முன்மாதிரியான செயலைச் செய்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த ஆடையகத்தின் உரிமையாளர் ஹிரான் பீரிஸ் என்பவரே இந்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இளைஞனின் நேர்மையான செயல்
ஹிரான் பீரிஸ், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒரு மணியளவில் தனது மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கி வளாகத்தில் உள்ள ஏடிஎம் அறைக்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர் பண வைப்பு செய்ய தயாரான போது, திடீரென இயந்திரத்தின் பணத்தை உள்ளே செலுத்தும் பகுதி திறந்து கொண்டது.
அதனுள் 5,000 ரூபாய் தாள்கள் அடங்கிய பணக்கட்டு ஒன்று இருப்பதை கண்டுள்ளார். உடனடியாக குறித்த பணத்தை எடுத்துக் சென்று வங்கி ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன் போது 8,44,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட முகாமையாளர், நேர்மையாக செயற்பட்ட தொழிலதிபருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.