வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது, 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், ஏற்கனவே ஆறு பேரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர்களில் இருவர் அடையாள அணிவகுப்பின் போது, கொல்லப்பட்ட இளைஞனின் மனைவியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
அதேவேளை, சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.
தேடப்படும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
எனவே, வட்டுக்கோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நபர்கள் சந்தேகநபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |