வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி: சுற்றிவைளைப்பில் சிக்கிய நபர்
மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்த்தின் பெயரில் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பெயர்களை பயன்படுத்தி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மக்களை அழைத்துள்ளார்.
சந்தேகநபர் 9 பேரிடம் இருந்து 7 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கொழும்பு இல 5 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியப் பின்னர், அவரை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த மோசடிக்கு உதவிய அவரது மனைவி, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து தலைமறைவாகி இருப்பதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள இலங்கையர்களுக்கு உரிமை உண்டு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறு பணம் பெறுபவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், அதுகுறித்து பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |