கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த முதியவர்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்ற முதியவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த சாதனை நிகழ்வானது நேற்று (24) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு - காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது.
1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும், தலைமுடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
உலக சாதனை புத்தகம்
இதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலைமுடியாலும் இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக (Cholan Book of World Record) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்துள்ளதுடன் விருதையும், பட்டயத்தையும் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |