ஆங்கிலத்தால் சிங்கள மொழிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் விசேட பட்டப்படிப்புகள் என்பன ஆங்கிலத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமையானது இலங்கையின் பாரம்பரியத்திற்கும் தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச அரங்கில் நுழைவதற்கு ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது. எனினும் அனைத்து விடயங்களிலும் எமது தாய் மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அதனை வாழும் மொழியாக பேணப்பட வேண்டும்.
ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலையை சிங்கள மொழியும் எதிர் கொண்டு விடக்கூடாது.
மேலும் உலகின் பல நாடுகள் தமக்கான அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.