ஜகத் விதான எம்.பிக்கு எதிரான அச்சுறுத்தல்: பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பிற்கு அதிருப்தி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பானது சுதந்திரமான பொலிஸ் சேவையின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை பின்வருமாறு,
"அரசியல் அல்லாத காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அது என்னவென்று தெரியப்படுத்த வேண்டியது பொலிஸ்மா அதிபரின் பொறுப்பாகும்.

பொலிஸ்மா அதிபரின் அறிக்கைகள்
அவ்வாறு இல்லாமல் மறைமுகமாக அறிக்கை வெளியிடுவது பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கு செய்யப்படும் அவமதிப்பாகும்.
இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பொலிஸ்மா அதிபரின் கூற்றில் வெளிப்படுவது முறைப்பாட்டாளரையும், பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியாக மாற்றும் முயற்சியாகும்.
அரசின் பிரசாரத் திட்டத்துக்கு ஏற்ப பொலிஸ்மா அதிபரின் அறிக்கைகள் சுதந்திரமான பொலிஸின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி, பொலிஸ்மா அதிபர் நினைத்தபடி அறிக்கைகளை வெளியிட்டு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளில் நாடு அடக்குமுறை பொலிஸ் அதிகார இருளின் நிழலாகவே நாங்கள் காண்கின்றோம்.
இந்த ஆபத்து அனைத்து ஜனநாயக அரசியல் நீரோட்டங்களில் ஈடுபடும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதை ஊடக சந்திப்பாக மாற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் மூலம் உண்மையான கேள்விகளை மறைக்க எடுக்கும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான ஜகத் விதான நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு எதிராக நாங்கள் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |