இலங்கையில் நீதிக்காகப் போராடுகிறவர்கள் மிரட்டப்படுகிறார்கள்! ஐ.நாவில் தமிழர் தரப்பின் ஆதங்கம்
கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 - அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் ஏபிசி தமிழ் ஒலி (ABC Tamil Oli) அமைப்பின் சார்பாக சுபத்திரா வரதராயா தங்களது உரையை வழங்கினார்.
அதில் மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரின் அறிக்கைக்கும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களின் அறிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். ஏனென்றால் அதில் ஈழத்தமிழர்ககளுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துவிதமான இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார்கள்.
ஆனால் தமிழர்கள் அமைப்புசார்ந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் தங்களது அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி இன்று பிரதமராக மாறினார். அவரது சகோதரர் ஜனாதிபதியாக மாறினார்.
இவர்களது 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழ் மக்கள் தங்களது சுதந்திரம், அடையாளம், சமயம், நிலம், தங்களது இறந்த உறவுகளை நினைவு கூரும் உரிமை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரும் உரிமை, கருப்புச் ஜுலையை நினைவு கூரும் உரிமை, 17 நாட்கள் நீரின்றி, உணவின்றி தனது வாழ்வை ஈகம் செய்த தியாக தீபனை நினைவு கூரும் உரிமை ஆகியவற்றை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த திலீபன் 34 ஆண்டுகளுக்குமுன் என்ன கோரிக்கைகளுக்காக உணவு தவிர்த்து உயிர்விட்டாரோ அதே கோரிக்கைளை முன்வைத்து பொத்துவிலிருந்து பொலிக்கண்டி வரை ஊர்வலம் சென்றனர்.
இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரும் முக்கிய குழு நாடுகள் தமிழர்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமித்து, உண்மையை உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்று மனித உரிமை பேரவையைக் கேட்டுக்கொள்கிறோம் என தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பு!
கடந்த 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 - அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் இளம் மாணவர் அமைப்பின் ( Association Jeunesse Etudiante Tamoule ) சார்பாக திருமிகு சாருதி இரமேசு தங்களது உரையை வாசித்தார்.
அதில் மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரின் அறிக்கைக்கும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களின் அறிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். ஏனென்றால் அதில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துவிதமான இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார்கள்.
கடுமையான இராணுவமயமாக்கல் வழியாக தமிழர்களின் நிலத்தை அபகரித்து தமிழர்களின் வாழ்வை சிங்கள அரசு தொடர்ந்து அழித்து வருகின்றது. பன்னாட்டு சட்டத்தின்படி இனப்படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து பாதுகாக்கிறது.
இலங்கை பாதுகாப்புத் துறை தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்க செய்வதும், அவற்றை உள்நாட்டு பாதுகாப்பு துறையின்கீழ் கொண்டு வருவதும், அவற்றை நெறிப்படுத்துவதும் எங்களுக்கு பெரும் கவலையை தருகின்றன
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் 6 பௌத்த பிக்குகள் மட்டும் இருக்கின்றனர். ஈழத்தமிழர் எவரும் அதில் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மடங்களை கட்டுவது, சிங்கள பௌத்த தேசியத்தை அரசு ஆதரிப்பதால் தமிழர்கள் மேலும் ஓரம்கட்டப்படுகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்பும், குடிமைச் சமூகங்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை அரசு நடத்திய இனவழிப்பினை எடுத்துரைத்து பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினர் என தனது உரையில் தெரிவித்தார்.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தமிழர்கள்!
தமிழ் உலகம் (Tamil Uzhakam) அமைப்பு சார்பாக ஈழத்தில் இருந்து உரையாற்றிய பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை போராட்டத்தில் பெரும்பங்காற்றிய அவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாகரன் சிவபாலகணேசன் சுவாமிகள், எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக தமிழர்கள் போராடி வருகின்றனர்.
நாங்கள் ஒரு தேசிய இனமாக வடக்கிலும் கிழக்கிலும் அதிகமாக வாழ்ந்து வருகின்றோம். எங்களது இலக்கை முடிவு செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. கடந்த கால சிங்கள பௌத்த அரசுகள் தொடர்ந்து எங்களது சுயநிர்ணய உரிமையை அடக்கி, இராணுவத்தை பயன்படுத்தி எங்களை ஆட்சி செய்து, இன அழிப்பை நடத்துகிறது.
பிரித்தானியாவிடமிருந்து 1948ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டதிலிருந்து அறப்போராட்டத்தின் வழியாக தங்களது சுயநிர்ணய உரிமையைக் கேட்டனர். ஆனால் அந்த அறப்போராட்டங்களை சிங்கள பௌத்த அரசுகள் இராணுவத்தை பயன்படுத்தி அடக்கின. அதனால் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை எடுத்தனர்.
அதையும் இராணுவத்தை வைத்து அடக்கினர். இலட்சக்கணக்கில் குடிமக்களை கொலைசெய்தனர். தமிழ்ப் பெண்களை பாலியல் துன்புறுத்துதல், வல்லுறவு ஆகியவற்றை செய்தனர்.
2009 ல் முடிவடைந்த இறுதிகட்ட போரில் 70,000 தமிழ் மக்கள் ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர் என்று இலங்கையில் ஐ.நாவின் செயல்பாடுகள் குறித்து உள்மீளாய்வு நடத்திய ஐ.நா பொதுச் செயலர் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த போர் முடிவுக்கு பிறகு தமிழர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உட்பட்டனர். அதனால் பொத்துவில்லிருந்து பொதுகண்டிவரைக்கும் நீதி வேண்டி நடைபயணம் மேற்கொண்டனர்.
போர் குற்றங்களுக்காகவும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் இனஅழிப்பு நடத்தியதற்காகவும் இலங்கை சிங்கள பௌத்த அரசை பன்னாட்டு குற்றவியல் நடுவர்மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஐநா மனித உரிமை பேரவையையும் அதன் உறுப்பினர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தனது உரையில் குறிப்பிட்டார்.
நீதிக்காகப் போராடுகிறவர்கள் தொடர்ந்தும் மிரட்டப்படுகிறார்கள்!
தென்றல் அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரான்ஸ் வாழ் இளம் தமிழ் மாணவி யோகராசா பிரியங்கா, போர் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்தும் மனித உரிமையின் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. சில மாற்றங்கள் தொடர்ந்து அழிவுப்பாதையில் நடக்கின்றன.1, 46, 000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள அரசு நடத்திய இன அழிப்பு போரில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இராணுவம் தமிழ் அரசியல் கட்சிகளையும், குடிமைச்சமூகங்களையும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளையும், சமயப் பகுதிகளையும், இனவழிப்பு போர் நடந்தபொழுது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வுகளை தடுத்தல் போன்றவற்றை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றது.
1600 நாட்களுக்குமேல் காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் தங்களது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நீதிக்காக போராடுகின்றவர்கள் தொடர்ந்து இராணுவத்தால் மிரட்டப்படுகின்றனர்.
சிங்கள அரசு மனிதஉரிமை பேரவையில் கொண்டுவந்த தீர்மானங்களை செயல்படுத்த ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு எதையும் செயல்படுத்தவில்லை. அதனால் பொறுப்புக் கூறுவதற்கும் நீதிக்கும், ஒப்புறவுக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
இலங்கை மீது தீர்மானத்தைக் கொண்டு வரும் முக்கிய குழுவும் மானிட உரிமைகளின் பேரவையின் உறுப்பினர்களும் தமிழர்கள் முன்வைக்கும் சட்டப்பூர்வமான வேண்டுகோளையும் தமிழர்மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைப்பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
பாதுகாப்பு பேரவையின் வழியாக இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிறுத்தவேண்டும். நான்காவது திட்ட வரைவுக்குகீழ் புதிய தீர்மானத்தை கொண்டு வந்து இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவேண்டும். தமிழர்கள் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என தனது உரையில் எடுத்துரைத்தார்.
ஐ.நா வில் எடுத்துரைக்கப்பட்ட தியாகி திலீபனின் ஈகம்!
பாரதி பிரெஞ்சு தமிழ்ப் பண்பாட்டு அமைப்பின் (Association Bharathi Centre Cultural Franco-Tamoul) சார்பாக உரையாற்றிய அமெரிக்கா வாழ் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் லவன் முத்து, பல தசாப்தங்களாக ஈழத்தமிழர்கள் அடக்கியாளும் சர்வாதிகார சிங்கள அரசுக்குகீழ் போராடிக் கொண்டிருக்கின்றனர். 1987 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் 5 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு கடிதத்தை இந்திய ஒன்றிய அரசிடம் கொடுத்தது.
அவை பின்வருமாறு: சிங்கள காலணியாக்கத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். முகாமிலும் சிறையிலும் சிங்கள இராணுவத்தாலும் காவல்துறையினராலும் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். நெருக்கடி விதிமுறைகளை அகற்றவேண்டும்.
இலங்கை அரசு உருவாக்கிய ஊர் காவல்படையிருக்கு கொடுக்கப்படும் ஆயுதங்களை நிறுத்தவும். தமிழர் பகுதிகளில் சிங்கள காவல்துறையை உருவாக்குவதை நிறுத்தவும்.
இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஓர் உரையை 23 அகவை நிறைந்த இளைஞன் நிகழ்த்தி, உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். அதில் பலர் கலந்துகொண்டனர். 12 நாட்களாக நீரைக்கூட அருந்த மறுத்து செப்டம்பர் 26 நாள் தியாகச் சுடர் திலீபன் உயிர் நீத்தார். அவருக்கு ஈகியர் அடக்கச் சடங்கு யாழ்ப்பாணத்தில் கொடுக்கப்பட்டது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, இலண்டனில் உண்மை நீதிக்காக பெப்ரவரி 27ஆம் நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னாள் இங்கிலாந்து அரசுப்பணியாளர், இன்று மனித உரிமை போராளி திருமிகு அம்பிகை செல்வக்குமார் தொடங்கியிருக்கிறார்.
உடனடியாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை ஈழத்தமிழர்களின் சார்பாக முன்வைத்த நான்கு கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.
காத்திரமான பன்னாட்டு விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழர்கள்!
பக்கத்தை திருப்பு அமைப்பு (Tourner La Page) சார்பாக உரையாற்றிய கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையும் எல்லா நாடுகளில், குறிப்பாக இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் பதிவு செய்து அறிக்கை தந்த ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்தையும் அதன் உறுப்பினர்களையும் வரவேற்கின்றேன்.
ஆனால் அவை ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுக்கிறது. உயர் ஆணையர் அலுவலகமும் இந்தப் பேரவை பிறகு தந்த தீர்மானங்களும் தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பை ஏற்க மறுக்கின்றன.
2009 ல் நடைபெற்ற கடைசிக்கட்ட போரில் சிறீலங்கா இராணுவம் தமிழர்களின் எதிர்ப்பை அடக்கியது. குறுகிய காலத்தில் 1, 47, 000 க்கு மேற்பட்ட தமிழர்களை கொன்றொழித்தது. 80 மில்லியன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வடக்கு மாகாண அவையும், இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றமும் இனஅழிப்பையும் எல்லா குற்றங்களையும் கண்டுபிடிக்க ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
தமிழர்களின் கூக்குரல் பொங்கு தமிழிலும், 1, 00, 000 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட பொத்துவிலிருந்து பொலிக்கண்டி வரை நடந்த ஊர்வலத்திலும் கேட்கப்பட்டது. இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும், சிறப்பு ஆய்வாளரை இலங்கைக்கு நியமித்து உண்மையில் நடந்த, நடக்கும் இனஅழிப்பை ஆய்வுசெய்து உலகிற்கு அறிவிக்கவேண்டும் என தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
தமிழர் தாயகத்தில் தொடரும் சிறீலங்காவின் காலணித்துவம்
பாலம் ( Le Pont) அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரான்சு வாழ் இளம் தமிழ் மாணவன் துரையப்பா ருக்சன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு தமிழர்ளுக்கு ஓர் இராணுவ வீரர், வடக்கு மாகாணத்தில் ஆறு தமிழர்களுக்கு ஓர் இராணுவ வீரர் என்ற அளவில் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள இராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக ஒதுக்குவதாலும் வனத்துறைக்கும், பௌத்த வழிபாட்டுதலங்களுக்கும், தொல்லியல்துறைக்கும் ஒதுக்குவதாலும், தங்களது வெற்றியின் நினைவிடங்களுக்கும், பௌத்த கோவில்களுக்கும், சிங்கள காலனிகளை உருவாக்குவதற்கும் தமிழர்களின் நிலங்களை ஒதுக்குவதாலும் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்து அழிப்பதுதான் அரசின் தெளிவான திட்டமாகும்.
முக்கிய குழுவால் இலங்கையைக் குறித்து முன்வைத்த அறிக்கை மானிட உரிமை உயர் ஆணையரால் முன்வைக்கப்பட்ட மீளாய்வை கண்டுகொள்ளவில்லை. அவர் சிறீலங்கா அரசு நீதியை நிலைநிறுத்த, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தினார்.
எதிர்காலத்தில் வரும் முரண்பாடுகளை தடுக்க பன்னாட்டு சமுகத்தின் ஈடுபாடு தேவை என்று வலியுறுத்தினார். நிரந்தர அமைதியும் நீதியும் பொறுப்புக் கூறலும் உறுதிபடுத்த தெளிவான அணுமுறையை விவரிப்பதாக இல்லை.
ஐநாவின் புலமைமிக்க குழுவின் எல்லா உறுப்பினர்களும், 9 பழைய சிறப்பு ஆய்வாளர்களும், நான்கு பழைய உயர் ஆணையர்களும் இன்றைய ஐநா மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரும் முன்வைக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.
இலங்கையின்மீது இந்தப் பேரவை கொண்டு வரும் தீர்மானம் தமிழ் மக்களை காலனியாக்குவதையும் அவர்களது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும். அதுபோல வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுமயமாக்கலை நிறுத்தவேண்டும்.
பன்னாட்டு மனித உரிமை குழுவால் நம்பிக்கையும் சூழலையும் உருவாக்கவேண்டும் என தனது உரையில் வலிறுத்தினார்.
ஐ.நா வில் சுட்டிக்காட்டப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதிகோரிய தீர்மானங்கள்!
மானிட இயக்கத்தின் செயல் ( Action Of Human Movement ) அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரான்சு வாழ் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் நிசாந்தி பீரிசு அவர்கள்,
இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள், இலங்கை மாகாண அவைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் 18 எக்கோசோக் தொண்டு நிறுவனங்களும் உலகின் பலநாடுகளிலிருந்து 3200 தொண்டு நிறுவனங்களும் இந்த அறிக்கையை கொடுத்தன.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடைபெற்றது என்றும் பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவந்தனர்.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி. விக்னேசுவரன் தலைமையில் தமிழ் மக்கள்மீது 1948 ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசு இன அழிப்பு நடத்தி வருகின்றதென தீர்மானத்தை தயாரித்து உறுப்பினர்கள் அனைவரும் ஏற்று நிறைவேற்றினர்.
பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக ஐநா மனித உரிமை உயர் ஆணையமும், அதோடு தொடர்புடைய அமைப்புகளும் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 நாள் வடக்கு மகாணம் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லையென்று பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறீலங்காவை நிறுத்த வழிகாட்டவேண்டும். திட்ட வரைவு 4க்குகீழ் இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமித்து, இன்று தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்காணித்து ஆய்வறிக்கைத் தரவேண்டுமென்று தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.
பாதுகாப்பு பேரவையால் சிறீலங்கா அரசை பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் நிறுத்த ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறப்பு அமர்வுகள் நடத்தப்படவேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழின அழிப்பை ஆராய்வதில் ஐ.நா தோல்வி அடைந்ததால் அது இன்றும் தொடர்கிறது!
இளம் தமிழ் மாணவர்கள் (Jeunesse Etudiante Tamoule) அமைப்பின் சார்பாக உரையாற்றிய முன்னை நாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன், 1948 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையை ஆட்சி செய்த பல்வேறு அரசுகள் திட்டமிட்டு தமிழர்கள்மீது ஓர் இன அழிப்பை நடத்தினர்.
உலக நாடுகளிலிருந்து வளர்ச்சித் திட்ட உதவிகளைப் பெற்று, தமிழர்களின் அடையாளத்தை அந்த மண்ணில் அழித்தும் தமிழர்களின் வரலாற்று மரபு இடங்களை சிங்கள பௌத்த இடங்களாக மாற்றுகின்றனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வழியாக தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பை ஐ.நா ஆராய்வதில் தோல்வி அடைந்ததால் இன்றும் தொடர்ந்து இனஅழிப்பு நடக்கிறது.
தமிழர்களது நிலம் இலங்கை இராணுவத்தினால் காலனியாக்குவது இன்றைய உண்மை நிகழ்வாக இருக்கிறது. கடந்த வருடம் தமிழ் மண்ணிலிருந்து 1,00,000 தமிழ் இளைஞர்களைப்பற்றிய தரவுகளை எடுத்து, வேலைவாய்ப்பு தருவதாக இலங்கை அரசு நாடகமாடியது.
வட்டுக்கோட்டை தீர்மானம், சுதுமலை, பொங்கு தமிழ், எழுக தமிழ், சில நாட்களுக்கு முன்னாள் பி2பி(பொத்துவில் - புலிகண்டி எழுச்சி) போன்ற பல்வேறு எழுச்சிக் கூட்டங்கள் வடக்கு, கிழக்கு மகாணங்களில் நடந்தன.
400 கல்தொலைவு நடைபெற்ற ஊர்வலத்தில்1,00,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இலங்கை அரசை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றதில் நிறுத்து என்றும், இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டுமென்றும், சிரியாவில் அமைத்ததுபோல சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான பொறிமுறையை அமைக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைத்ததுடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் பாரம்பரிய இன அழிப்பு செயல்களை உற்றுநோக்க சிறப்புச் சட்டத்தை ஐநா மனித உரிமை பேரவை கொண்டுவரவேண்டும் என்று தனது உரையில் கோரிக்கை வைத்தார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
