தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் - மு.திருநாவுக்கரசு
அரசியல் அதிகாரத்தில் மக்கள் பங்காளிகளாவதற்குப் பெயரே ஜனநாயகம். பிரதிநிதித்துவச் ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தில் ஓரம்சம் மட்டுமே.
மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பிரதிநிதிகள் மூலம் பிரயோகிப்பது தான் நாடாளுமன்ற ஜனநாயகம்.மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சனநாயகம் சுருங்கி விடுவதுமல்ல அது சிறைப்பட்டு விடுவதுமல்ல. ஜனநாயகம் ஒரு வாழ்க்கை முறை. அது புள்ளடி போடுவதோடு தன்னைச் சுருக்கிக்கொள்வதில்லை. மக்கள் அப்படிப் புள்ளடி போடுவதே அவர்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டவும் அதைப் பெருக்கிக் கொள்ளவுமேதான்.
அத்தகைய பிரதிநிதிகள் ஜனநாயகத்திற்கான மக்களின் காலபோகக் கருவிகளே தவிர மக்களின் எசமானர்களல்ல.கருவிலிருக்கும் சிசுவின் பாதுகாப்பு, உரிமை என்பவற்றிலிருந்து கல்லறை வரையும் மட்டுமல்ல அதற்குப் பின்புங்கூட சமூக மயப்பட்ட வாழ்வு, உரிமை, கெளரவம் என அனைத்தையும் தழுவிய வாழ்வியலுக்குப் பெயர்தான் ஜனநாயகம். இறைமை --அதிகாரம் என்பன ஒரு காலத்தில் மன்னர்களின், வம்சங்களின் கைகளிலிருந்தன.
ஜனநாயக யுகம்
தேசிய ஜனநாயக யுகத்தில் மக்களதிகாரத்தைத் தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொண்டார்கள். இதன்படி மக்கள் கைக்கதிகாரம் மாறியதற்குப் பெயர்தான் ஜனநாயகம். அதாவது பரந்துபட்ட மக்கள் அரசியலதிகாரத்தில் பங்காளிகளாகினர். அதாவது மக்களை அரசியலதிகாரத்தில் பங்காளிகள் ஆக்கியதற்குப் பெயர்தான் ஜனநாயக யுகம்.
2020 ஆம் ஆண்டு மே மாதம் டெரெக் சாவின் என்ற வெள்ளையின பொலிஸ் அதிகாரியால் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின பொதுமகன் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட போது அமெரிக்காவிலெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன.
வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிளர்ச்சியாளர்களால் முற்றுகைக்குள்ளானார். அப்போது நீதிக்காக மக்கள் கிளர்ச்சி செய்வது மக்களின் ஜனநாயக உரிமையென்றும், அமெரிக்க அரசியல் யாப்பு கிளர்ச்சிகளினாலும், புரட்சிகளினாலும் உருப்பெற்று வளருமொன்று என்றும் கூறிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அந்தக் கிளர்ச்சிகளைச் சனநாயகத்தின் ஓரம்சமென வர்ணித்தார்.
எதிர்ப்புப் போராட்டம் பற்றிப் பேசி வருபவர்களே, இந்த நாடு அமெரிக்கப் புரட்சி என்றழைக்கப்படும் போராட்டத்தினடிப்படையில் நிறுவப்பட்டதென்பதைச் சற்று நினைவிற் கொள்ளுங்களென்று ஒபாமா வொசிங்டனிலுள்ள தனது வீட்டிலிருந்து கூறினார்.
அத்தோடு, இந்நாட்டில் முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும், சுதந்திரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும், நமது ஆழ்ந்த இலட்சியங்களின் ஒவ்வொரு வெளிப்பாடும் அவ்வப்போது காணப்பட்ட பழைய நிலையை நெருக்கடிகளுக்குள்ளாக்கிய முயற்சிகள் மூலம் வென்றெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அதிகார மையங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதும் தான் போராட்டத்தின் நோக்கம். உண்மையில், அமெரிக்க வரலாறு முழுவதும், அது ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகங்களின் நலங்களுக்கான மாற்றங்களுக்குள்ளாகுவதென்பது அந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் சிவில் ஒத்துழையாமை இயக்கங்கள் என்பனவற்றிற்கான பெறுபேறுகளாகவே பெரும்பாலும் இருந்து வருகின்றன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மேற்படி கருத்தானது ஜனநாயகம் என்பது புள்ளடி போடுவதற்கும், வெறும் கோசங்களுக்கும் அப்பால் நேரடி மக்கள் போராட்டங்களில் மையங்கொண்டுள்ளது என்பதை தெளிவுறப் பறை சாற்றுகின்றது.
பிரதிநிதித்துவ முறைகளினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படாது போகும்போது மக்கள் தமக்குரிய ஜனநாயக உரிமைகளை நேரடி ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளின் மூலம் அல்லது நேரடி ஜனநாயகப் போராட்டங்களின் மூலம் கையிலெடுப்பதும் அவற்றை நிலை நாட்டுவதும் அவசியமான ஜனநாயக நடவடிக்கைகளாகும்.
குறிப்பாக அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான பின்லேடனின் தாக்குதலைத் தொடர்ந்து செப்டமபர் 28, 2001 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புத் தீர்மானம் 1373 (2001) ( சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புத் தீர்மானம், 1373 (2001) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்தீர்மானம் உலகெங்கும் ஆயுதப் போராட்டங்களுக்கு பாதகமாகக் காணப்பட்ட சூழலில் ஜனநாயக வழி நேரடி மக்கள் போராட்டங்கள் பரவலாக வெடித்தன. இதன் முக்கிய முதல் முனைப்பை 2010 - 2011 நிகழ்ந்த "துனீசிய மக்கள் புரட்சி" என்ற 28 நாள் மக்கள் எழுச்சி போராட்டத்தின் வாயிலாக எதேச்ச அதிகாரியான ஜனாதிபதி ஜைன் எல் அபிடின் பென் அலி அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடியதைக் காணலாம்.
மக்கள் எழுச்சி போராட்டம்
இலங்கையில் முன்ளாள் ஜனாதிபதி கோட்டாபய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்றோர் 2022 ஆம் ஆண்டு இத்தகைய நேரடி மக்கள் கிளர்ச்சிகளின் மூலம் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டமை, இந்தியாவில் 2020 -2021 விவசாயிகள் போராட்டம், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி ஜல்லிக்கட்டுப் போராட்டம் 2024 ஆம் ஆண்டு பங்களாதேசில் மாணவர் - மக்கள் கிளர்ச்சி மூலம் பிரதமர் ஷேக் ஹசினா பதவியிலிலிருந்து அகற்றப்பட்டமை போன்றன நேரடி மக்கள் எழுச்சி ஜனநாயகப் போராட்டங்களுக்கான வெற்றிகரமான உதாரணங்களாக அமைந்தன.
ஜனநாயக வழியிலான இத்தகைய மக்கள் எழுச்சிப் போராட்ட முறைகள் உலகெங்கும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றன. தேர்தல்கள் வாயிலாகப் பதவிக்கு வந்த மக்கள் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் அவ்வப்போது அரசவியந்திரங்களின் நலன்களோடு தத்தம் சுயநலங்களையும் இணைத்துத் மக்களின் நலன்களுக்குப் புறம்பான அல்லது மக்கள் விரோதமான அரசியலில் ஈடுபடுவதுண்டு.
அத்தகைய வேளைகளிலெல்லாம் மக்கள் தமது நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க அரச இயந்திரத்திற்கும் நாம் ஏற்கனவே தெரிவு செய்திருந்த தலைவர்களுக்கும் எதிராகக் குரல் கிளர்ச்சிகளில் ஈடுபடுவது இருக்க முடியாதவொரு ஜனநாயக நடவடிக்கையாகும். மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதோடு ஜனநாயகத்தை அவர்களின் கைககளிற் தாரைவார்த்து விடுவதல்ல. இந்த வகையில் அரச இயந்திரம் மக்களுக்குப் பாதகமாக அமையும் போதும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் விரோதவரசியலில் ஈடுபடும் போதும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைத் தமது கையில் எடுத்துக் கொள்வதற்காகப் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.
அவ்வாறு ஈடுபடுவதற்குப் பெயர் ஜனநாயகவுரிமை, ஜனநாயக வழிமுறையாகும். அதாவது ஜனநாயகத்தின் பொருட்டு முடியரசசிற் எதிராகப் போராடிய மக்கள், மன்னர்களுக்கெதிராகப் போராடிய மக்கள், அந்நிய ஆதிக்கத்திற்கெதிராகப் போராடிய மக்கள் தமது இழக்கப் பட முடியாத, விட்டுக்கொடுக்கப்பட முடியாத உரிமைகளுக்காகத் தாம் உருவாக்கிய அரசு, தாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம், தாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் போன்ற யார் மீறினாலும் அவர்களுக்கெதிராகப் போராடும் வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டவர்கள்.
எனவே கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் என்பன யாவும் ஜனநாயகத்தின் இன்றியமையாப் பக்கங்களாகும். ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் இலங்கையின் கடந்தவொரு நூற்றாண்டுக்கு மேலான அரசியல் யாப்புகள் யாவுமே தமிழின மற்றும் இந்திய விரோத இனப்பெரும்பான்மை( Ethnic majoritarian constitution) அரசியல் யாப்புக்களேயாகும். இனப்பெரும்பான்மை ஆதிக்கத்திற்குப் பொருத்தமான வகையிலேயே இலங்கையின் நாடாளுமன்ற முறைமையும், ஜனாதிபதி முறைமையும், தேர்தல் முறைமையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கோர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆதலால் இலங்கையின் நாடாளுமன்ற முறைமையோ, ஜனாதிபதி முறைமையோ, அவை சார்ந்த சிங்கள - தமிழ் பிரதிநிதிகளோ ஈழத்தமிழரின் உரிமைகளுக்கான பாதுகாப்பைக் கொண்டிருக்க மாட்டாது. அதாவது ஈழத் தமிழ்ப் பிரதிநிதிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற அரசியலில் தொடரிழப்பைத் தவிர பெற்றவை என்று எதுவுமில்லை. அதாவது ஜி. ஜி. பொன்னம்பலம் மூச்சுவிடாமல் 14 மணி நேரம் நாடாளுமன்றத்திலுரையாற்றிக் கண்ட பயனேதுமில்லை. அப்படியே செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன்- சுமந்திரன்- சேனாதி -, கஜேந்திரகுமார் போன்ற எவரும் காக்கா, கொக்கு, குருவி, சிங்கம், புலி, கரடி, தவளை, சில்வண்டெனக் கத்திக், குழறிக், கீச்சிட்டு, எந்தப் பயனுமில்லை.
ஏனெனில் இலங்கையின் அரசியல் யாப்பானது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடிவமானது என்பதே அடிப்படை உண்மையாகும். " கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை" என்ற சுமாராக 75 பக்கங்களைக் கொண்ட எனது சிறு நூலில் இதற்கான விளக்கத்தை விலாவாரியாகப் பார்க்கலாம்.
ஈழத்தமிழர் பொறுத்து நாடாளுமன்ற அரசியல் பாதை பயனற்றது என்கின்ற கருத்து நடைமுறை அனுபவத்திற்கூடாக 1970 களின் நடுப்பகுதியைத் தொடர்ந்து உருப்பெற்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினடிப்படையில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து அதற்கான மக்கள் ஆணைபெறும் தேர்தலாக 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் பொதுத்தேர்தலைத் தமிழ் தரப்புக் கையாண்டது.
அதுவே இலங்கை அரசின் கீழ் தமிழர் பங்குபற்றும் இறுதி தேர்தலென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும், தமிழீழ விடுதலை அமைப்புகளினாலும் மக்கள் மத்தியில் தெளிவுறச் சொல்லப்பட்டது. 1977 ஆம் ஆண்டு தேர்தல் வாயிலாக மக்கள் ஆணை பெற்றதும்' தமிழீழ நிழலரசை "[ தமிழீழ இடைக்கால அரசு] அமைப்பதென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரகடனப்படுத்தியிருந்தது.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறு செய்யத்தவறி தமிழீழத்திற்கு மாறாக 1980ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளென்று ஜே.ஆர். ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வை நோக்கிக் கூட்டணி நகர்ந்தது. இதன் பின்னணியிற் ஏகத் தலைமையாக விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணிக்கெதிராகவும், தமிழ் மக்களின் ஏகத் தலைவராக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கத்திற்கெதிராகவும் அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின.போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்தன.
தமிழ் மக்களின் உரிமை
1980 ஆம் ஆண்டு அமிர்தலிங்கத்திற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக உபவேந்திராலும், பல்கலைக்கழக ஆசிரியர்களாலும் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துசாரத்திற் கலந்து கொள்ள அமிர்தலிங்கம் பல்கலைக்கழகத்தினுட் பிரவேசித்த போது அமிர்தலிங்கம் பல்கலைக்கழகத்துக்குள்ளே இருந்த நிலையில் வாசற்கதவுகள் அடைக்கப்பட்டு அவருக்கெதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கி மதிலிற்கு மேலால் வெளியே வீசினார்கள். கூடவே அவரது பரிவாரமும், ஆயுதம் தாங்கிய அவரது பாதுகாவலரும் வாயிற் கதவைத் திறந்து வெளியே துரத்தப்பட்டார்கள்.
இதேயாண்டு பல்கலைக்கழக மைதானத்தில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி ஆர்ப்பாட்டத்தோடு மாணவர்களால் முதன் முறையாகத் தீயிட்டெரிக்கப்பட்டது. இவை இரண்டும் நான் கண்கண்ட காட்சிகள் "நீங்கள் தேடிய தலைவர் நானே" என்று 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று திமிருடன் உரையாற்றிய ராஜபக்சவை ஓடி ஒளிய இடமின்றி, ஒடிப் பதுங்கி 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டை விட்டு வெளியேறிப் பதவியிழந்தார்.
தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகத்தலைவரான அமிர்தலிங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு வழங்கிய அதே தீர்ப்பை "நானே தலைவன்" மார்தட்டிய கோட்டாபயவுக்கு 2022 ஆம் ஆண்டு சிங்கள மக்களின் கிளர்ச்சி அரசியல் வழங்கியது. 1980 ஆம் ஆண்டு ஏகத்தலைவன் அமிர்தலிங்கத்திற்கெதிராக வெடித்த மக்கள் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் காலத்தில் ஆறுகால் மடத்தில் நிகழவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தற் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்ற விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிம்பரம் தனது பரிவாரங்களுடன் உதயசூரியன் கொடி பறக்க வாகனத்திற் பயணித்துக் கொண்டிருந்த வேளை யாழ்ப்பாணம் கோம்பையன் மணற் சுடலைக்கு முன்னால் அவரது வாகனம் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது உதய சூரியன் கொடி அகற்றப்பட்டதுடன் அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் வைதுபேசியதுடன் அவர் வாகனத்துடன் திருப்பியனுப்பப்பட்டார்.
அந்தச் சுடலையிலிருந்து சுமாராக 100 மீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமும் கலைந்து போனது. பின்பு 1985 ஆம் ஆண்டு நல்லூர் வீராலியம்மன் கோவில் மண்டபத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் கட்சி பிரமுகர்களென பலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது குறிப்பாக இளைஞர்கள், மேலும் குறிப்பாகப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கே உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்குக் கோழிப் பிரியாணிச் சோற்றுப் பாசல்களை விநியோகித்தனர். அமிர்தலிங்கத்திற்குக் கோழிக்கால் தீத்தப்பட்டது. பெண்ணென்ற வகையில் அவரது மனைவியைச் சற்று மரியாதையாக அந்த இடத்தைவிட்டு அகற்றியிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலும், சிதைந்து தப்பியோடினர். மேற்படி இரு சம்பவங்களையும் நேரிற் கண்டேன். இவ்வாறு மக்கள் எழுச்சி, மக்கள் கிளர்ச்சி என்பனவற்றிற்கு முன்னால் நின்று பிடிக்க முடியாத நிலையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அடைந்தனர். தமிழ் மக்கள் காலத்திற்குக் காலம் தங்கள் போர்க் குணத்தை, கிளர்ச்சி அரசியலை வெளிக்காட்டத் தவறியதில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் மிடுக்குடன் "எழுக தமிழ்ப் போராட்டம் எழுந்தது.
அதனைத் தோற்கடித்தது எதிரியல்ல மாறாகப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே அதனைத் தற்கொலைக்கு உள்ளாக்கினார்கள் என்பது வேறொரு சோகக் கதை. அதேவேளை தர்க்கபூர்வ வரலாற்றுப் போக்கின்படி பார்த்தால் இந்த "எழுக தமிழ்" போராட்ட முறைதான் மகிந்த மற்றும் கோட்டாபய போன்றோருக்கெதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சிக்கான முன்னுதாரணத்தை சிங்கள முன்னோடிகளுக்கு வழங்கியது.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலான நாடாளுமன்ற அரசியலால் தமிழ் மக்கள் எதனையும் பெற முடியாதென்ற உண்மை, உள்ளங்கை நெல்லி கனியென நிறுவப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் சனநாயக வழியிலான மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வரலாறு வேறொரு கதவையும் திறந்து வைத்திருக்கவில்லை. தமிழ் மக்களுக்கான எந்தொரு அரசியற் தீர்வையும் இலங்கை நாடாளுமன்றமோ, ஜனாதிபதி முறைமையோ ஒருபோதும் தராது. நாடாளுமன்ற உரைகளினாலோ, வாதங்களினாலோ, பிரசங்கங்களினாலோ எதனையும் சாதிக்க முடியாது. மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் உறுப்பினர்களால் நாடாளுமன்ற மேடையை போர்க்களமாக மாற்றக்கூடிய வாய்ப்புகள் இந்த அரசியல் யாப்பின் கீழுண்டு. அல்லது நாடாளுமன்றத்தைக் குழப்பத்துக்கு உள்ளாக்கக்கூடிய வாய்ப்புகளுண்டு.
உடனடியாக நடக்கச் சாத்தியமற்ற அரசியற் தீர்வுகளைப் பற்றிக் கத்திக் குழறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாய் உலகத்தின் மனச்சாட்சியைத் திறக்கவல்ல அல்லது போராட்டத்தை முன்னெடுக்கவல்ல முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்ட அரசியலை முன்னெடுக்கலாம்.
1) இனப்படுகொலைக்கெதிரான சர்வதேச விசாரணை. 2) காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணை. 3) இசைப்பிரியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலைக்கான விசாரணையும், உயிருடன் இராணுவத்தின் கையிலிருந்த சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கெதிரான சர்வதேச விசாரணையும். போன்ற மூன்று கோரிக்கைகளையும் முன்னிறுத்தி முன்னெடுக்க முடியும்.
நாடாளுமன்றத்திற்குள் போராடுவதற்கான வடிவங்கள் பலவுண்டு அவற்றை பின்பு விபரமாகப் பார்க்கலாம். ஆனால் போராட்டத் தயாராக வேண்டுமென்பதே முதன்மையானது. முள்ளிவாய்க்காலின் பின்பு இதுவரை தோல்வியடைந்த அனைத்துத் தலைவர்களும் இனியும் சரியான வழியிற் போராடத் தயாரில்லையென்றால் அமிர்தலிங்கத்திற்கெதிராக மக்கள் கிளர்ச்சியரசியலில் ஈடுபட்டது போல் ராஜபக்சங்களுக்கெதிராக ஈடுபட்டது போல் தமிழ்த் தலைவர்களுக்கெதிராக வீரியத்துடன் போராடத் தொடங்குவார்கள்.
அரசோ தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ மக்கள் விரோத அரசியலில் ஈடுபட்ட போது ஜனநாயக வழியிலான கிளர்ச்சி அரசியல் சனநாயகத்திற்கான ஈட்டி முனையாகும். மேலே சுட்டிக்காட்டியவாறு இது விடயத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பேச்சு முத்தாய்ப்பானது. விடுதலைக்காகப் புறப்பட்ட தலைவர்கள் மக்களின் எதிரிகளாக மாறும் வரலாறுகளுள்ளன. ஆயினும் மக்கள் அவர்களைப் புதை குழிகளுக்குள் தள்ளி அந்த புதைகுழிகளின் மேல் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பத் தவறுவதில்லை.
தான் மீட்பராய் போற்றிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த அவரது சீடன் யூதாஸ் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு காட்டிக் கொடுத்திருந்த அந்த யூதாஸ் தான் செய்த துரோகத்தின் பொருட்டு மறுபுறம் மனச் சாட்சி உறுத்திய நிலையில் அதற்கான பாவமன்னிப்பாய், தான்யூத மதத் தலைவர் ஜோசப் பென் கயபஸ் இடமிருந்து பெற்றிருந்த சன்மானப் பணத்தை அவரது முகத்தில் வீசி எறிந்துவிட்டு தன்னுயிர் நீத்தார் என்ற கருத்தையும் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.
அப்படி பாவமன்னிப்புப் பெறாதவர்களை மக்கள் மரச்சிலுவைகளில் அறையாது விட்டாலும் வரலாற்றுச் சிலுவைகளில் ஏற்றத் தவறுவதில்லை. தமிழ்த் தலைவர்கள் இத்தகைய போதனைகளையும், வரலாற்றுப் படிப்பினைகளையும் கருத்திலெடுத்துத் தமிழ் மக்களின் உரிமைக்கான ஜனநாயக வழிக் கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க தவறினால் அவர்கள் இயல்பாகவே வரலாற்றிலிருந்து விரைவில் தூக்கி எறியப்படுவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 11 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.