யாழில் பொலிஸாரிடம் உலங்குவானூர்தி கோரிய சட்டத்தரணி சுகாஸ் (Video)
யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை பகுதியில் மல்லாகம் நீதிமன்ற கட்டளையை மீறி நடமாடினால் கைது செய்வோம் என போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற கட்டளை தெரியாது பொலிஸார் உரையாடுவதாகவும் அவ்வாறு நாம் நடமாட முடியாதெனில் போராட்டக்களத்திற்கு வருகை தர தமக்கு உலங்குவானூர்தியை வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் பொலிஸாரை கேட்டுகொண்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டமொன்று நேற்றைய தினம் (03.05.2023 ) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வலி.வடக்கு தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேற்றைய தினம் (04.05.2023) மல்லாகம் நீதவான் காயத்திரி களவிஜயம் மேற்கொண்டு விபரங்களை ஆராய்ந்து, யாழ்.தையிட்டி விகாரை வழிபாட்டிற்கும்,விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு என உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.