யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய தையிட்டி விகாரை விவகாரத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு(Video)
தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ,விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என மல்லாகம் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும். அப்போது தான் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும் எனினும் குறித்த உரிமைகளை அனுபவிக்கும் போது விகாரையின் முகப்பிலோ அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்த கூடாது.
தற்போது இருந்த நிலை உரிய நீதிமன்றினால் கட்டளையாக்கப்படும் வரை அவ்வாறு பேணப்பட வேண்டும். மன்றினால் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் பிரிவு 105 இன் கீழ் இடைக்கால கட்டளையாக்கப்பட்டுள்ளது.
செய்தி-கஜிந்தன்
முதலாம் இணைப்பு
வலி.வடக்கு தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு மல்லாகம் நீதவான் காயத்திரி களவிஜயம் மேற்கொண்டு விபரங்களை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது குறித்த காணிக்கு முன்னுள்ள தனியார் காணியின் எல்லை பகுதியினுள் எவ்வித குழப்பங்கள், கோசங்கள் இன்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என நீதவான் காயத்திரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு இன்று(04.05.2023) காலை கைது செய்யப்பட்ட ஜந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
ஜந்து பேருக்கும் பிணை
வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை (03.05.2023) கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விகாரையை சுற்றியுள்ள காணி
இதன்போது இராணுவம் மற்றும் பொலிஸாரால் வீதிமறியல் போடப்பட்டது. ஆகையால் வெளியே உள்ளவர்கள் உள்ளே போக முடியாத, உள்ளே உள்ளவர்கள் வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது.
அந்தவகையில் உணவுகளோ மருந்து பொருட்களோ உள்ளே உள்ளவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து இன்று காலை மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல முயற்சித்த ஐவரை பலாலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்காக சட்டத்தரணி சுகாஷ் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
வெசாக் தினத்துக்கு வழிபாடு
இதன்போது அவர்கள் ஐவரையும் மல்லாகம் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. பின்னர் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தார்.
அதன்பின்னர் விகாரைக்கு முன்னால் உள்ள காணியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம், வெசாக் தினத்துக்கு வழிபாடு செய்வதற்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்று கூறினார்.
அதன்பின்னர் வீதி மறியலுக்கு வெளியே இருந்து போராடியவர்கள் வீதி மறியலுக்கு உள்ளே சென்று அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.