தொழிலதிபர்களை கடத்தி கொடுமைப்படுத்தி, பணம் பறித்த போலி இராணுவ மேஜர்
கொழும்பில் இராணுவ மேஜர் என்று கூறி செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கடத்துதல், மிரட்டுதல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் பேலியகொட குற்றப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பேலியகொட குற்றப்பிரிவு பணிப்பாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொலிஸாரை ஏமாற்ற மேஜராக செயல்பட்டு பல்வேறு குற்றங்களைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குற்றச்செயல்கள்
சந்தேக நபர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சீதுவவில் தற்காலிக இடத்தில் தங்கியிருந்து இந்தக் குற்றங்களைச் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ மேஜர் என்ற போலி அடையாள அட்டையையும் தயாரித்த சந்தேக நபர், இராணுவ சீருடையில் இந்தக் குற்றங்களைச் செய்துள்ளார்.
அவரது கையடக்க தொலைபேசியை சோதனை செய்தபோது, பல்வேறு தொழிலதிபர்களைக் கடத்தித் தாக்கி பணம் பறிக்கும் பல வீடியோக்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள்
சந்தேக நபரினால் மேற்கொள்ளப்பட்ட பல குற்றங்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேலியகொட குற்றப்பிரிவு பணிப்பாளர் ரோஹன் ஒலுகலவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.