அறப் போராளி தியாக தீபம் திலீபன்: நினைவேந்தலை தடுப்பது சரியா
அகிம்சை என்பது பிறரைக் காயப்படுத்தாது, தீங்கு விளைவிக்காது இருத்தல் என்று பொருள்படுகின்றது. இது சைவம் உள்ளிட்ட பல சமயங்களில் முக்கிய ஒழுக்கக் கொள்கையாக பார்க்கப்படுவதுடன் போதிக்கப்படுகின்றது.
அகிம்சை வழியிலான அறப் போராட்டங்கள் பலவற்றை இந்த உலகம் கண்டுள்ளது. அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் முறை அமைதியானதும் கூட.
அகிம்சை வழியில் இந்திய சுதந்திரப் போரில் மகாத்மா காந்தி முன்னெடுத்த உப்புச் சத்தியாகிரகம் வெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றது எனபது நாம் அனைவரும் அறிந்தது.
அந்த இந்திய தேசம் 1987 ஆம் ஆண்டில் இலங்கைக்கு தன் ஆயுதப் படையினரை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி வைத்தது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அமைதிப் படையினரிடம் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துமாறும் இலங்கை பொலிஸ் நிலையங்களை அமைப்பதை தடுக்கவும் சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்யவும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கையை முன் வைத்து சாகும் வரை உண்ணா நோன்பினை மேற்கொண்டவர் தான் தியாகி திலீபன்.(லெப்டினன்ட் கேணல் திலீபன்)
2009 க்கு பின்னர் பல அரசாங்கங்கள் மாறிய போதும் நிலையான ஒழுங்கமைப்பில் நினைவு தினத்தை முன்னெடுத்துச் செல்ல சிங்கள மக்கள் விட்டதும் இல்லை. நினைவு தினத்தை முன்னெடுக்காது தமிழ் மக்கள் இருந்ததும் இல்லை.
ஆனாலும் இந்த யதார்த்தமான சூழலை இலங்கை அரசு இதுவரை புரிந்து கொள்ளவில்லை. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இலகுவாக நினைவு தின முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடிகின்றமையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
தடையுத்தரவுகளும் வழக்கு தள்ளுபடிகளும்
தியாக தீபம் திலீபனின் 36ஆம் வருட நினைவு நிகழ்வுகளை தாயகமெங்கும் நடாத்துவதற்கு பரவலாக தடையேற்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசும் சிங்கள மக்களின் ஒரு பிரிவினரும் இந்த செயற்பாட்டில் முனைப்பாக இருக்கின்றனர்.
நீதிமன்றங்களின் சட்ட வரையறைகளைக் கொண்டு இந்த தடை உத்தரவு பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
கொழும்பு மாவட்டத்தில் எல்லா பொலிஸ் நிலையங்களிற்கும் இத் தடை உத்தரவு வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்த பணிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழுப்பு மாவட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் தியாகி திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாது. இதே போன்ற முன்னகர்வுகளை வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட எல்லா மாவட்டங்களிலும் தடையுத்தரவை கோரிய போதும் தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் வழங்கப்படவில்லை.
மாறாக தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு சில வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தடை உத்தரவு வழங்கப்படாது பாதுகாப்பை வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்று கட்டளையிட்டதை நோக்க வேண்டும்.
தியாகி திலீபன் தடை செய்யப்பட்டவரா?
இலங்கையில் சிங்கள அரசாங்கங்களின் மென்முறையற்ற அணுகுமுறையால் தமிழர்களுடைய அகிம்சைவழி போராட்டங்கள் வன்முறை கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டன.
அப்போதெல்லாம் வன்முறை பிரயோகம் தவறு என்று எந்த நடவடிக்கைகளையும் இலங்கை அரசுச் சட்டங்கள் மேற்கொள்ளவில்லை. அமைதியான முறையை மட்டுமே நீண்ட நெடுங்காலமாக விரும்பி வந்த தமிழர்கள் வன்முறையை தங்களின் இறுதி முயற்சியாக கையிலெடுத்தனர்.
1972 இல் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்பான புதிய புலிகள் அமைப்பு 1976. 05. 05 இல் தம்மை தமிழீழ விடுதலைப் புலிகள் என பெயர் மாற்றிக்கொண்டு முனைப்புக் கொண்டு செயற்பட முனைந்தது.
1981. 06. 1 இல் நடைபெற்ற யாழ்.பொது நூலக எரிப்புக்கும் 1983 ஜூலைக் கலவரங்களுக்கும் இலங்கை அரசு எத்தகைய சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் எந்த வகையில் யாழ். பொது நூலகம் பங்கெடுத்தது என்பதும் அதனை அவர்கள் எந்த வகையில் எரித்து நாசம் செய்தார்கள் என்பதும் விடைகாண முடியாத வினாவாக இருக்கும் போது அந்த செயலோடு தொடர்புபட்டவர்களை சட்டம் தண்டிக்கவில்லை என்பதும் ஈழப்பீடு வழங்கப்படவில்லை என்பதும் இன்றளவும் உள்ள நீதி மீதான நம்பிக்கையீனம் என்பதை என்று சட்டத்துறையும் நீதி மன்றங்களும் புரிந்துகொள்ளும் என்பது தெரியவில்லை.
இலங்கையில் ஆகஸ்ட் 29 ,2011 இல் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட எண் 1721/2 ஆவணத்தின் ( வர்த்தமானி) மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டனர்.
அப்படியானால் 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 1987 செப்டம்பர் 26 இல் உண்ணாவிரத போராட்டத்தின் தோல்வியோடு வீரச்சாவினை தழுவிய திலீபனும் அவரது செயற்பாடுகளும் தடைசெய்யப்படவில்லை.
2011 இல் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கு பயன்பட்ட சட்டம் 1979 இல் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது( 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) என்றால் திலீபனின் செயற்பாடுகள் வலுவில் உள்ளபோது நாட்டில் இந்த சட்டமும் வலுவில் தான் இருந்துள்ளது.
அப்போது விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் இந்த தடைச்சட்டம் கட்டுப்படுத்தவில்லை. அப்படியென்றால் திலீபனின் இறப்பின் பின்னரான விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளே தண்டனைக்குரியதாக இருந்து அதனை 2011 இல் இலங்கை அரசு தடை செய்துள்ளது.
இந்த வகையில் பார்த்தால் திலீபன் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரும் இல்லை. திலீபனின் செயற்பாடுகளை இலங்கையின் இந்த சட்டமும் கட்டுப்படுத்தவில்லை. திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டிருந்தால் சாதாரண குற்றங்களுக்கான இலங்கையின் சட்டங்களால் மட்டுமே தண்டிக்கப்பட்டிருப்பார்.
அப்படி என்றால் இன்று திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை நிகழ்த்துவதில் எந்த சட்டவிரோதமும் இருந்துவிடப் போவதில்லை. பொது மக்களுக்கு இடையூறு என்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றும் வாதிடும் இலங்கைவின் பொலிஸார் எந்த பொது அமைதியை பேண முயல்கின்றனர்?
தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடி வீரச்சாவடைந்த ஒருவரை கூடி வந்து நினைவு கூரும் போது எப்படி அமைதி கெடுக்கப்படும்? இலங்கைவின் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் நினைவு கூறும் நிகழ்வுகளை இடையீடு செய்யாது விட்டால், இலங்கை பொலிஸார் அமைதியை பேணும் வகையில் பாதுகாப்பை பேணினால் (சிங்கள மக்கள் தமிழர்களது உணர்வுகளை புரிந்து கொண்டால் ) நினைவு தினங்களை தமிழர் அமைதியாகவே செய்து கொள்வார்கள்.
இதனை 2009 இற்குப் பின்னர் பல தடவைகள் செய்து காட்டியும் உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம்
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரச்சாவடைந்தவர்களை நினைவு கூரும் போதும் அவர்கள் தொடர்பான நினைவுகளை மீட்டும் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீளவும் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாதிடுவது முட்டாள்தனமானது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தோன்றுவதற்கான காரணங்களை இல்லாது செய்து விட்டால் அவர்கள் மீண்டும் தோன்றி விடப் போவதில்லை. பசிக்காக களவு செய்பவருக்கு பசி போக்கும் வழி கிடைத்து விட்டால் களவு செய்யும் தேவை இருக்காது. இந்த நியாயத்தை கடந்த காலங்களில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டதும் அதன் படி பிள்ளையின் பசி போக்க திருட்டில் ஈடுபட்ட தாய்க்கு உதவி வழங்க அந்த நீதிமன்றம் பணித்ததும் குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியல் தேவைகளுக்காக தமிழர்களின் இறந்தவர்களை போற்றும் அடிப்படை உரிமையைப் பறிப்பதும் தடுப்பதும் அதற்காக அவர்கள் போராடுவதும் தான் விடுதலைப்புலிகளை இன்றைய இளையவர்கள் மத்தியில் தேட வைக்கின்றது.
விடுதலைப்புலிகளின் வீரமிகு போராட்டங்களும் அவர்களின் தலைவரது தீர்க்கதரிசனம் மிக்க கருத்துக்களும் இளைய தலைமுறையினரிடையே சென்று சேரும் போது (அது சிங்கள இளம் தலைமுறையினராக கூட இருக்கலாம்) மீண்டும் அவர்களைப் போல் வலுவான அமைப்புக்கள் தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது போகும் நிலை தோன்றும்.
திலிபனின் அகிம்சைவழி போராட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்டார் திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன். அப்போது தான் அவர் உயர்தர உயிரியல் பிரிவில் தோற்றிய பரீட்சையில் மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தினரால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளிலிருந்து விடுதலை பெற்று வாழும் பெரு அவா அப்போது அவரிடம் இருந்தது. படிப்படியான செயற்திறனை வெளிப்படுத்தி விடுதலைப்புலிகளின் நிர்வாக பிரிவு யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக உயர்ந்து தன் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்திய அரசின் பொருந்தாத வெளிவிவகார கொள்கையின் ஒரு முடிவாக இலங்கை வந்திருந்த இந்திய இராணுவத்திற்கெதிராக விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை போராட்டத்தின் ஒரு பங்குதாரராக உண்ணாவிரதத்தை திலீபன் முன்னெடுத்திருந்தார்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொண்ட போராட்டத்தின் நெறிபிறளாத தன்மையைக் கூட இலங்கை மற்றும் இந்திய அரசுகள் மதிக்கவில்லை. இறுதியில் திலீபன் பன்னிரண்டு நாட்கள் நீரும் உணவும் உள்ளெடுக்காது உடல் உருகி உயிரை விட்டார்.
இதன் பின்விளைவுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்படுத்திய விளைவுகள் பாரதூரமானதாக இருந்தது என்பதனையும் அவதானிக்க வேண்டும்.
ஈற்றில் நாட்டிலிருந்து இந்திய அமைதிப் படையினரை வெளியேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளோடு கைகோர்த்துக் கொண்டது என்பதும் இங்கே நோக்க வேண்டியது.
ஐந்தம்ச கோரிக்கைகள்
திலீபனின் அகிம்சை போராட்டத்தின் மூலம் அடைய முயன்ற இலக்குகள் பின்வருமாறு.
01) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
02) சிறைக் கூடங்களிலும் இராணுவ மற்றும் பொலிஸாரின் (police) தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
03) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
04) ஊர் பொலிஸ் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
05) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் (police station ) திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இந்த கோரிக்கையில் யாதேனும் ஒன்றாவது சிங்கள மக்களையோ அல்லது இறைமையுள்ள இலங்கை அரசாங்கத்தையோ எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்காது என்பது திண்ணம்.
இருந்தும் அரசியல் இலாபங்களுக்காக திலீபனை வீரச்சாவடைய விட்டு விட்டார்கள் என்பதும் இன்று அவரது நினைவு தினத்தை முன்னெடுப்பதற்கு தடையிடுவதும் மனித நேயமற்ற செயற்பாடுகளாகவே நோக்க வேண்டும்.
சிங்கள மக்களிடையேயும் மாற்றம் வேண்டும்
திருகோணமலையில் சிங்கள மக்கள் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளான திலீபனின் நினைவு ஊர்தியில் எத்தகைய சிங்கள மொழிமூல குறிப்புகளும் இல்லை என்பதை நோக்க வேண்டும்.
சிங்கள மக்கள் உள்ள ஒரு பகுதியால் ஊர்தி வரும்போது அவர்களுக்கு புரியாத அவர்களுக்கு தெரியாத நிகழ்வுகளின் பயணமாக திலீபனின் நினைவூர்தி பயணப்பட்டிருந்தது என்பது கசப்பான பொறுப்பற்ற ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
திலீபன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்பதும் மட்டுமே சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரோடியுள்ள கருத்தியலாக இருந்ததையும் நோக்க வேண்டும்.
தியாகி திலீபனின் அகிம்சை போராட்டம் பற்றியும் அன்றைய சூழலில் திலீபன் எடுத்துக்கொண்ட உறுதியையும் ஐந்து அம்சக் கோரிக்கையையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் சிங்கள மொழியிலும் எடுத்தியம்புதலே பொருத்தப்பாடானதாக அமையும்.
இனிவரும் காலங்களில் தமிழர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனமெடுப்பார்களாயின் நாளைய மாற்றங்கள் அவர்கள் சார்ந்ததாகவே மாறிப்போகும்.
இன்று சிங்கள மக்களிடையே ஏற்படும் தமிழர் நியாயங்கள் சார்பான புரிதலே நாளைய இலங்கையின் அமைதிக்கு ஆணிவேராக அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 21 September, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.