திருக்கோவில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்: த.கலையரசன் கருத்து
திருக்கோவில் மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் எந்த செயற்பாட்டினையும் மேற்கொள்ள நாம் இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு
திருக்கோவிலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது திருக்கோவில் பிரதேசத்தை அழிக்கின்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு தொடர்பில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினோம்.
திருக்கோவில் பிரதேசம், கடலை அண்டிய மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்களைக் கொண்ட பிரதேசமாகும்.
பிரதேச மக்களின் எதிர்ப்பு
இங்கு இல்மனைட் என்று சொல்லப்படுகின்ற தாதுப்பொருள் அகழ்வினை முன்னெடுப்பதற்குரிய பணிகளை சுமார் 7 வருடங்களாக சில நிறுவனங்கள் மேற்கொள்கின்ற போது பிரதேச மக்களும் அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பின் காரணமாகத் தடுக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த செயற்பட்டினை ஆரம்பிப்பதற்குரிய பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அறியக் கிடைத்தது.
இது தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டியது எமது கடமையாகும்.
ஒரு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் இருக்கின்ற நிலையில் இதற்கு மாறாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த இல்மனைட அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
இந்த பிரதேசத்தில் கடந்த காலங்களில் கடலரிப்பு ஏற்பட்டமையால் பல மரங்கள் அழிவுற்றுள்ள நிலையில், ஆலயங்கள் மற்றும் மக்களின் வீடுகள் எல்லாம் கடலால் சூழப்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற வாழ்வு
பிரதேசத்தில் இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு மேற்கொள்ளப்படுவதை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
இது ஒரு அத்தியாவசிமற்ற விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இந்தியாவில் இவ்வாறு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பிரதேச மக்கள் புற்றுநோய்க்கு உள்ளாக்கப்பட்டு அப்பிரதேச மக்கள் ஆரோக்கியமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் நாங்கள் படித்திருக்கின்றோம்.
மக்களைப் பாதிக்கும் செயற்பாடுகள்
2021ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பில் அமைச்சருடான கலந்துரையாடலின் போது ஒலுவில் துறைமுகத்திலிருந்து பொத்துவில் வரையான பிரதேசத்தை மையமாக வைத்து இந்த இல்மனைட் அகழ்வு நடவடிககையை மேற்கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் எடுத்துக் கூறியருந்தோம்.
இதன்போது எமது கிராமங்களில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டோம் என்றும் மக்களைப் பாதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளமாட்டோம் என்றும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
எமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவிகளைச் செய்வதைத் தவிர்த்து அவர்களை அழிப்பதற்குரிய விடயங்களைக் கையாள்வதாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.



