திருக்கோணேஸ்வரம் ஆலய அங்கத்துவப் பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல் - திருத்தம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை
திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு முறையை அறிமுகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவத் திட்டம் பாராட்டத்தக்க ஒன்றாக இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறை பக்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகும்.
தற்போதைய நடைமுறையின்படி, விண்ணப்பப் படிவங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே வழங்கப்படுவதுடன், விண்ணப்பதாரர் நேரில் வந்து மட்டுமே விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்
பின்னர் மீண்டும் நேரில் வந்து விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டியதுடன், கிராம அலுவலரின் பரிந்துரையையும் பெற்றிருக்க வேண்டும்.
அதன் பின்னர் உறுப்பினர் அடையாள அட்டையைப் பெறவும் கட்டணத்தைச் செலுத்தவும் மீண்டும் ஆலயத்திற்கு அல்லது ஆலய அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் ஒரு பக்தர் ஆயுள் அங்கத்துவத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் மூன்று தடவைகள் ஆலயத்திற்கு அல்லது ஆலய அலுவலகத்திற்கு வர வேண்டியுள்ளதாகவும், இது குறிப்பாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் திருகோணமலைக்கு வெளியே வசிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலய யாப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது விண்ணப்பங்கள் ஜூலை 15 ஆம் திகதிக்குப் பின்னர் பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டால், ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் உறுப்பினர் பட்டியலை எவ்வாறு தயாரித்து காட்சிப்படுத்த முடியும் என்பது தொடர்பாக பக்தர்கள் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அத்துடன், ஆயுள் அங்கத்துவ விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே வழங்குதல், விண்ணப்பதாரர் பல தடவைகள் நேரில் வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துதல், கிராம அலுவலரின் பரிந்துரையை கட்டாயமாக்குதல் போன்ற நடைமுறைகளுக்கு ஆலய யாப்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை என்றும், அவ்வாறான நடைமுறைகள் எந்த அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்
எனவே, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரே தடவையில் விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, கட்டணத்துடன் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தேசிய அடையாள அட்டையை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கிராம அலுவலரின் பரிந்துரை பெறும் கட்டாயத்தை நீக்க வேண்டும் என்றும், உறுப்பினர் அடையாள அட்டையை பின்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் அல்லது தயாரானதும் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் கூடிய முறைப்பாட்டு மனுக்கள் கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. சு. குகதாசன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடி தலையீடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்ட பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய நடைமுறைகள் ஆலய யாப்பிற்கு அமைவானவையா என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விசாரணை நடத்தி, தேவையான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்களின் வசதிக்கும் ஆலய யாப்பின் விதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நிர்வாக நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.