நல்லூரில் அகற்றப்பட்ட திலீபன் சிலை! விசாரணைக்கு சென்ற முக்கியஸ்தர்கள்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலையை நிறுவியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் நால்வருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் இன்று (5) காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் ஆகியோர், கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணனுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
தியாக திலீபன் சிலை விவகாரம்
நினைவேந்தலுக்காக நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை கடந்த 27ஆம் திகதி காலை பொலிஸாரால் அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிலை நிறுவியமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், வாக்குமூலம் வழங்குவதற்காக நால்வருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.
அதன்படி, தியாக தீபத்தின் நினைவேந்தல் கட்டமைப்பைச் சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவணக் காப்பக செயற்பாட்டாளர் வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ப. மயூரன் மற்றும் வரதராஜா பார்த்தீபன் ஆகிய இருவரும் இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
you may like this video