பசியோடு இருக்கும் திலீபம்...!
ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இன்று மிக முக்கிய நாள். திலீபன் எனும் நான்கெழுத்துத் தமிழ் பெயர் அகிம்சையின் அடையாளமாகிய எழுச்சி நாள்.
1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி காலை 10.38 மணிக்கு இராசையா பார்த்தீபன் என்கிற இயற்பெயரும், திலீபன் என்கிற 'இயக்கப்' பெயருமுடைய தியாகத்தின் திருமேனி நல்லூர் வீதியில் இன விடுதலைக்கான விரதத்தில் அமர்ந்த நாள்.
திலீபனின் கொள்கை
“கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். மருத்துவப் பரிசோதனை செய்யக் கூடாது. நான் உணர்வு இழந்த பிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது” எனக் கூறிவிட்டுத்தான் தன் உண்ணாவிரதப் போரைத் தொடங்கினார் திலீபன்.
அந்நாளில் அவர் கூறிய வார்த்தைகள், கொண்ட கொள்கையில் அவர் கொண்டிருந்த பற்றினை மிகக் கனதியாக இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் அரசியலில் இந்தியாவின் அதீத செல்வாக்கு
உடலைப் பசியில் எரித்து நடத்தப்பட்ட இந்த வேள்விக்கு வலுவான ஐந்து கோரிக்கைகள் இந்தியாவின் முன்வைக்கப்பட்டன. தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசு இதயச்சுத்தத்துடன் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்கிற நம்பிக்கையிழப்பின் காரணமாக, இவ் ஐந்து கோரிக்கைகளும் இந்தியாவை நோக்கியே முன்வைக்கப்பட்டன.
ஏனெனில் 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியா, இலங்கையின் அரசியலில் அதீத செல்வாக்கைக் கொண்டிருந்தது.
இலங்கை இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாக்கத் தன் படைகளை நேரடியாக இறக்கியிருந்தது.
“பொத்துவில் முதல் யாழ் வரை” ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின வாகன ஊர்வலம்! |
அத்துடன், அகிம்சையின் மூலமாகத் தன் நாட்டு விடுதலையையே சாத்தியமாக்கிய இந்திய தேசம், ஈழத்தவரின் அகிம்சைப் போராட்டத்திற்கும் மரியாதையளிக்கும் என அனைவருமே நம்பினர்.
எனவே திலீபன் தன் போராட்டத்திற்கான கோரிக்கைகள் அனைத்தையும் இந்தியாவை நோக்கி முன்வைத்தார்.
வலுவான ஐந்து கோரிக்கைகள்
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிதாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை உடனடியாகக் களைய வேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். என்பன திலீபனின் போராட்டத்திற்கான கோரிக்கைகளாக அமைந்தன.
இந்தக் கோரிக்கைளில் எவற்றையுமே இந்தியா நிறைவேற்றவில்லை. செவிசாய்க்கவுமில்லை. ஆனால் இன்றும் இந்தியாவை மீறி எதையும் செய்யத் துணிவற்றுக் கிடக்கும் இலங்கைத் தீவுக்கு அழுத்தங்களைப் பிரயோதித்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்க முடியும். இந்தியாவினால் மிக இலகுவாக செய்திருக்க முடியும்.
தமிழர் மீதான வன்மம் நிறைந்த இந்திய இராஜதந்திரப் போக்கினால் அந்தக் கோரிக்கைகளை இன்றும் கூட நிறைவேற்ற முடியவில்லை.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்
உண்ணாவிரதி திலீபன் முன்வைத்த கோரிக்கைளின் தலையாயது, வடக்கு, கிழக்குப் பகுதிகளின் இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது 1987 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட அக்கோரிக்கையின் விளைவுகளை இப்போதும் தமிழர்கள் அனுபவிக்கின்றனர்.
வவுனியாவின் வடக்கு, தெற்கு பகுதிகள், முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று, திருகோணமலையின் கந்தளாய், குச்சவெளி பகுதிகள், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் என தமிழர்களது மரபுவழித்தாயக இடங்கள் திட்டமிடப்பட்ட வகையில் சிங்களக் குடியேற்றத்தை எதிர்கொண்டிருக்கின்றன.
இந்தியாவிலேயே பிறந்த தத்துவமான பௌத்தம் இலங்கை தீவில் ஆக்கிரமிப்பின் மதமாக உருமாறியிருக்கிறது. சிங்களப் பெருந்தேசியவாதத்தினை ஏனைய இனங்கள் மீதான வன்மமாகக் கட்டமைக்கும் கலாசாலையாக மாறியிருக்கிறது.
அகிம்சையையும், ஏனையவர்கள் மீது அன்பையும், கருணையையும் போதித்த பௌத்தத்தின் இலங்கை முகம் மனித குலத்தையே அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது.
இலங்கை விடயத்தில் மௌனம் காக்கும் இந்தியா
இலங்கையில் வாழும் ஏனைய இனத்தவர்களது வாழிடங்கள் மீது வலிந்து வந்து தனது இருப்பிடத்தைத் தேடிக்கொள்கின்றது. அதனை எதேச்சாதிகாரத்தின் மீதேறி தக்கவைத்துக்கொள்கிறது.
இவ்வாறு தன் தேசத்துத் தத்துவம் நெறி பிறழ்ந்து வளர்வதை இந்தியா அனுமதித்திருக்கக்கூடாது. வழிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது எப்போதும் நிகழவேயில்லை. எரியும் தீயில் எண்ணெய் வார்த்த சம்பவங்களே அதிகம் நிகழ்ந்தன.
இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வன்முறைகளின் போது தமிழ் இளைஞர்கள் பலர் அரசியல் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டனர். அவ்வாறு சிறையிலடைக்கப்பட்ட பலர் சிறைக்குள்ளேயே இறந்தும் போனார்கள்.
குட்டிமணி தொடக்கம் டில்ருக்சான் வரைக்கும் அந்தக் கொலைகளின் நீளம் மிகப் பெரியது. இன்றும் தாய்மார்கள், மனைவிமார்கள், பிள்ளைகள் போன்றோர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க்கோரி அகிம்சார்த்த தளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அவசரகாலத் தடைச்சட்ட நீக்கம்
அடுத்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும் அவசரகாலத் தடைச்சட்ட நீக்கம் பற்றிய கோரிக்கையையும் திலீபன் அவர்கள் முன்வைத்தார்.
இலங்கை அரசு தனக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்களை மிலேச்சத்தனமாகக் கட்டுப்படுத்தும் பொறிமுறையாக அவசரகாலத் தடைச்சட்டத்தையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் கையில் வைத்திருக்கின்றது.
பொதுமக்களுக்கு இருக்கின்ற அணிதிரளும் உரிமை, ஜனநாயக முறைப்படி போராடும் உரிமை போன்றவற்றை மறுக்கும் இந்தச் சட்டங்களானவை சர்வதேச ஜனநாயக நியமங்களுக்கு உட்படாதவை. எவ்விதத்திலும் மனிதவுரிகைளை மதியாதவை.
இதனால் தான் இலங்கையைக் கையாள்வதற்கான ஒரு துருப்பாக இந்தச் சட்டங்களின் நீக்கத்தை அல்லது மறுசீரமைப்பை மேற்கு நாடுகள் கோரி வருகின்றன.
இவ்வளவு காலமும் தமிழ் இளைஞர்களும், முஸ்லிம் இளைஞர்களும் மட்டும்தான் இந்தச் சட்டங்களால் பாதிப்பை எதிர்நோக்கி வந்தனர். இவ்வாண்டில் தெற்கில் ஏற்பட்ட ராஜபக்சர்களுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து, சிங்கள இளைஞர்களும் இந்தச் சட்டங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரி அவர்களும் போராடத் தொடங்கியிருக்கின்றனர்.
விரதத்தின் தீயில் வேகாத திலீபனின் ஆன்மா
இந்தியா தமிழர் நலனில் துளியளவாகவாது அக்கறை கொண்டிருப்பின், புலிகளற்ற இந்தச் சூழலிலாவது திலீபனின் முதல் மூன்று கோரிக்கைகளையாவது நிறைவேற்றியிருக்க முடியும்.
இலங்கை எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீட்டுவருவதற்கு இந்தியா உயிரைக்கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறது.
இலங்கை எதிர்கொண்டிருக்கின்றன மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டிலிருந்து பிணையெடுப்பதற்கு இந்தியா சர்வதேச அரங்கில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது.
எவ்விதத்திலும் நியாயமற்ற இந்தப் பிணையெடுப்பில் காட்டிய அக்கறையில் ஒரு வீதத்தைத் தமிழர் விடயத்தில் இந்தியா காட்டியிருந்தால் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைத் தடுத்திருக்க முடியும். அரசியல் கைதிகளை விடுவித்திருக்க முடியும்.
அவசாரகாலத் தடைச்சட்டம் – பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றை நீக்குவதற்கு வழியேற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை.
இந்த விடயங்களில் மேற்கு நாடுகள் அளவிற்குக் கூட இந்தியாவானது இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.
எனவே தான் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாதிருக்கின்றன. அவரின் பசிப் பயணம் இன்னமும் நீள்கிறது. விரதத்தின் தீயில் வேகாத அவரின் ஆன்மா இன்னமும் விடுதலையைத் தேடிக்கொண்டிருக்கிறது.
அத்துடன் தமிழர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராகப் உணவை விடுத்து, உயிரை உருக்கிப் பெருக்கிய பெரும் போரின் விளைவை இலங்கைத் தீவு முழுமைக்கும் பரப்பி விட்டிருக்கிறது.