யாழில் முன்னெடுக்கப்படும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (Photos)
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் உணர்வுபூர்வமாக இன்று (15.09.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முதல் தேசிய எழுச்சிக்கொடி கட்டப்பட்டு பிரதான தூபியில் மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவாலயத்தில், போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொது சுடரேற்றினர்.
இதன்போது ஈகை சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
உணர்வுபூர்வமான நிகழ்வு
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுடன் இஸ்லாமிய, சிங்கள மாணவர்களும் இம்முறை உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்கள், யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென்றும் ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
26ஆம் திகதி வரை அனுஷ்டிப்பு
தொடர்ச்சியாக எதிர்வரும் 26ஆம் திகதி வரை மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.