நாட்டில் பல பகுதிகளில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரி கண்டன போராட்டம்(VIDEO)
நாடளாவிய ரீதியில் வடக்கு, கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினுடைய ஏற்பாட்டில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் இன்று(14.09.2022) இடம்பெற்றுள்ளது.
எதிர்ப்பு போராட்டம்
மனித உரிமை செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், இலங்கை அரசே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு,எமது நிலம் எமக்கு வேண்டும்,கருத்துச் சுதந்திரம் எமது உரிமை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
இதேவேளை போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
மனித உரிமை செயற்பாட்டாளர்களை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் எனும் கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், நீதிக்கான மக்கள் அமைப்பினால் இன்று(14.02.2022) வவுனியா குருமன்காட்டு சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
இதன்போது மனித உரிமை செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்து, கருத்துச்சுதந்திரம் எங்கள் உரிமை, நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - சதீஸ்
முல்லைத்தீவு
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட தரப்புகள் மீது அரச புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளினாலும் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினுடைய ஏற்பாட்டிலே இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுக்கபட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் செயல்பாடுகளை நிறுத்தமாறும் ஐக்கிய நாடுகள் சபையிலே இது தொடர்பில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு , எமது நிலம் எமக்கு வேண்டும், நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை, வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்து, கருத்து சுதந்திரம் எங்கள் உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்பினரை விரட்டாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயற்பாடு
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அச்சம் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தலைக்கவசங்களுடன் தங்களது முகங்களை காட்டாது போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கீதன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று(14.02.2022) இடம் பெற்றுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு, வடக்கு கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அரசு மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது போன் வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தீபன்
கிளிநொச்சி
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று(14.09.2022) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
போராட்டம் தொடர்பில் ஊடகங்களிற்கு வாசுகி விளக்கம்
இதன்போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் பதாதைகள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதேவேளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகங்களிற்கு வாசுகி கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - யது
மட்டக்களப்பு
பெண்கள்,சமூக சிவில் செயற்பாட்டாளர்கள்,சிவில் அமைப்புப் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கபட்டுள்ளது.
இந்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஏற்பாட்டில் இன்று(14.02.2022) மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டம் வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு, முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பில் மக்களின் கருத்துக்கள்
இப்போராட்டத்தில், “இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்,மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், அவர்களை பின்தொடர்வதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்கள்,ஊடகவியலாளர்கள்,மற்றும் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
அதுமட்டுமன்றி சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலைமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிக்கின்றது” போன்ற விடயங்கள் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறான அசம்பாவிதங்கள்,அநீதிகள் சிவில் அமைப்புக்களுக்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது என்பதையும் இந்த போராட்டம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மகஜர் கையளிப்பு
இதேவேளை குறித்த கண்டன போராட்டத்தில் கலந்துகொண்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் உள்ள உத்தியோகஸ்தரிடம் மகஜயொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
பெண் சிவில் செயற்பாட்டாளர்களை தொல்லைப்படுத்தும் அச்சுறுத்தலை நிறுத்து, பயங்கரவாததடைச் சட்டத்தினை பயன்படுத்தி அவர்களை கைது செய்வதை நிறுத்து, உலக நாடுகளில் பேணப்படும் மனித உரிமைகள் பேணலை ஸ்ரீலங்காவில் அரசே நடமுறைப்படுத்து மற்றும் எங்கே மனித உரிமை பேணப்படுகின்றது? என பல சுலோக அட்டைகளை தாங்கியவாறு அப்பகுதி மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றிய தலைவர் சபாரெத்தினம் சிவயோகநாதன்,மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பெண்கள்,பாதிக்கப்பட்ட மக்கள் எனப்பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - குமார்