21 கோவில்களில் துணிகர கொள்ளை: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 21 கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டார் எனக் கூறப்படும் நபரொருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபருக்கு, நகைகளை விற்பனை செய்ய உதவிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பேவெல - பொரகஸ் முகவரியைச் சேர்ந்த 43வயதுடைய நபரொருவரே பிரதான சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க,
கோவில்களை உடைக்கும் எண்ணம்
“விசாரணையின்போது பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் குறிப்பாக கோவிலை உடைத்து திருடுவதற்கு முன் கடவுளை வணங்கி, தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மது அருந்தியதன் காரணத்தினாலேயே கோவில்களை உடைக்கும் எண்ணம் வந்ததாக அவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
ஓராண்டுக்குள் 21 கோவில்களை உடைத்து அதில் கிடைத்த பணத்தை வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாகவும், திருடப்பட்ட தங்க நகைகளை நுவரெலியா ஹட்டன் மற்றும் தலவாக்கலை பகுதிகளிலுள்ள தங்க நகைகள் பதப்படுத்தும் நிலையங்களுக்கு விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலவாக்கலை, ராகலை, ஹைபோரஸ்ட், லிந்துல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடபுஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பெட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட இருபத்தொரு இந்து கோவில்களை உடைத்துள்ளார் என்றார்.