நிலக்கரி கப்பல் வரவில்லை என்றால் மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும்-பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்
இலங்கைக்கு எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரி கப்பல் வரவில்லை என்றால், தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பல மணி நேரம் மின் துண்டிப்பானது பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடைய செய்யும்
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் ஏற்பட போகும் நிலைமை தொடர்பாக சிங்கள தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அப்படியான நிலைமையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மிக மோசமான நிலைமைக்கு செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார். நீண்ட மின் துண்டிப்பு காரணமாக நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் ஸ்தம்பித்து போகும்.
மூன்று நாட்களுக்கு ஒரு நிலக்கரி கப்பல் வர வேண்டும்
கல்வி சீர்குலையும். எவருக்கும் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது நிலைமை மிகப் பெரிய அரசியல் நெருக்கடி வரை செல்லக்கூடும். எதிர்கால மின்சார நெருக்கடியை போக்க ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு பின்னர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நிலக்கரி கப்பல்கள் வர வேண்டும்.
அப்படி வரவில்லை என்றால், நாட்டின் மின்சார தேவையில் 35 முதல் 40 வீதத்தை பூர்த்தி செய்யும் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்து போகும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.