‘‘எம்மை பார்த்துக்கொள்ள யாருமில்லை” கண்ணீர் சிந்தும் துப்புரவு பணியாளர்கள் (VIDEO)
நாட்டைத் தூய்மையாக்கி, மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இந்த 21ம் நூற்றாண்டிலும் மேம்படவில்லை என்பது மட்டுமல்ல, இன்னும் அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருப்பது தான் வேதனை.
அவர்கள் சிந்தும் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று வரை யாரும் முயலவில்லை. இலங்கை முழுவதுமே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் அதிகம்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நாளாந்த அத்தியாவசிய தேவைகள்,வீட்டு வாடகை,மின்சார கட்டணம்,நீர் கட்டணம்,பிள்ளைகளின் கல்வி போன்ற விடயங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கிடைக்கும் மாத சம்பளத்தில் பெரும் போராட்டத்தின் மத்தியில் வாழ்க்கையை சமாளித்து வாழ்கின்றார்கள் இவர்கள்.
இவர்களைத் தூய்மைப் பணியாளர்கள் என்பதை விட தூய்மை மருத்துவர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.
தூய்மைப் பணியில் ஈடுபடும்போது, தங்களுடைய உடலும் சீர்கெடுகிறது என்பது தெரிந்தேதான் மக்களுக்காக இவர்கள் பணி செய்கிறார்கள். அனைத்து தூய்மைப் பணியாளர்களின் ஒரே கோரிக்கை ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்பது தான்.
உரிய அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மழை வெயில் பார்க்காது இந்த நாட்டை ஒவ்வொரு நாளும் தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் குறித்து இதுவரை நாம் சிந்தித்ததுண்டா? அவர்கள் வியர்வை சிந்தி தூய்மைப்படுத்தி விட்டு செல்லும் இடத்தில் மிக இலகுவாக குப்பைகளை வீசி விட்டு செல்கிறோம்.
அதேநேரம் சிலர் தூய்மைப்பணியாளர்களை மதிக்காது அவமரியாதைபடுத்தும் விதமாக நடத்தும் சம்பவங்களும் பதிவாகின்றன.
ஏன் தூய்மைப் பணியாளர்கள் மனிதர்கள் இல்லையா? பாடுபட்டு உழைத்து நாட்டையும்
தூய்மையாக்கி, நம்மையும் சுகாதாரமாக வாழ வழிசெய்யும் அவர்களை இனியாவது மதித்து
அவர்களுக்கு உதவாவிட்டாலும் கூட அவர்களின் பணிக்கு இடையூறு இன்றி செயற்படுவோம்.



