மிஹிந்தலையில் மாணிக்கத்திற்கு பாதுகாப்பு இல்லை - உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்..! சர்ச்சையை கிளப்பும் தேரர்
வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை மகா சேயாவின் புனிதப் பொருட்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து மிஹிந்தலே ரஜமகா விகாரையின் தலைமைப் பொறுப்பாளரான வாலவஹங்குனவேவ தம்மரத்ன தேரர், தனது கடுமையான கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.
சூடா மாணிக்கம் மற்றும் மிஹிந்தலே மஹிந்து மகா சேயாவிற்கு தாய்லாந்திலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட கோத் கிரெல்லா ஆகியவற்றுக்கு முறையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கத் தவறியமைக்கும் அவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் குறைபாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்லியல் திணைக்களத்தின் முழுமையான ஒப்புதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த புனிதமான செயலுக்குப் பாதுகாப்பு கோரியிருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எனக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, சூடா மாணிக்கத்தை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டிய நிலை கூட எனக்கு ஏற்பட்டது என்றார்.

உயிராபத்து
மேலும், இந்தப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, இது தொடர்பாக செயலாளர் பொருத்தமற்ற கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டி, தேரர் அது தொடர்பான ஒலிப்பதிவு ஒன்றையும் ஊடகங்களுக்கு வெளியிட்டார்
இந்த நிலையில் தமக்கோ அல்லது கேள்விக்குட்பட்ட இளம் பத்திரிகையாளரின் உயிருக்கோ ஏதேனும் ஆபத்தோ தீங்கோ ஏற்பட்டால், அதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த நிலைமைக்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இலங்கைச் சட்டத்தரணிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.