கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் திருட்டு
கொழும்பு, புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தையில் உள்ள கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள கலையரங்கில் திருடர்கள் புகுந்து மின்சார அமைப்பில் இருந்த செப்பு கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த கட்டடம் 24 மணி நேரமும் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளபோதும், சிசிரிவி கமராக்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளபோதும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணையில், சந்தேக நபர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
முறைப்பாடு பதிவு
திருடப்பட்ட செப்பு கம்பிகள், கலையரங்கில் உள்ள மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கும் அமைப்பின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டு கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் கலையரங்கம் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



