கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண்
கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட "நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான" போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா ஒரு விதவை பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டதோடு, தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு இடர்முகாமைத்துவ சேவைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்றானது கனடா நாட்டில் மிக வேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்து கொண்டிருந்த வேளையில் தனது இடர்முகாமைத்துவ அமைப்பின் ஊடாக உயிர்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
இத்தகை துணிச்சலாலும், மன உறுதியாலும் கனடா நாட்டினை கொரொனா நோய் தொற்றிலிருந்து மீட்டெடுக்க உதவியமைக்காகவும், துணிச்சல் மிக்க பெண்களை வெளி உலகத்திற்கு இனங்காட்டும் வகையிலும் Canadian Occupational Safety சஞ்சிகையினால் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கனடா நாட்டின் உயர்சாதனை படைத்தவர்களின் வரிசையில் தனது பெயரைப் பொறித்தமையின்
ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களை தலை நிமிர வைத்துள்ளதாகவும் தனக்கு
மட்டுமே வாழாமல் தன் தேசத்துக்கும் தன்னை அர்ப்பணித்த இப் பெண்னால் ஒட்டுமொத்த
புலம்பெயர் தமிழர்களும் பெருமை கொள்வதாகவும் பலர் தமது பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.