ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி திங்கள் முதல் ஆரம்பம்
இலங்கையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க கடந்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் உள்ள 10,155 பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
அமைச்சில் வைத்து இன்று ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் நேரடி தலையீடு காரணமாக, இந்த பணி விரைவில் முடிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று காலை அனைத்து மாகாண ஆளுநர்கள், தலைமை செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் ஆகியோருடன் கலந்துரையாடபட்டுள்ளது.
இந்தவேளை தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் பாடசாலைகளை முதல் கட்டமாக விரைவில் திறக்கமுடியும் என்று அமைச்சர் கூறினார்.