பிரான்ஸ் பாராளுமன்றம் முன் ஈழத்தமிழர்களின் நீதி வேண்டிய போராட்டம்
ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை சுய கௌரவத்துடன் தங்களது பிரதேசத்தில் தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற கொள்கையுடன் இன்று பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் அரசாங்கத்திற்கு தங்களது பிரச்சனைகளை பல போராட்ட வடிவங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார்கள் இன்றைய தினம் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக ஈழத்தமிழர்களுக்கான நீதி வேண்டிய போராட்டம் இடம்பெற்றது.
இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது...
ஸ்ரீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்ஸ் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இடம்பெற்றது.
பிரான்ஸ் வாழ்தமிழ் மக்கள் இன்று திங்கட்கிழமை பேரெழுச்சியாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முன்பாக ஒன்று திரண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
ஸ்ரீலங்காவில் ஈழத்தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கு, அம்மக்கள் புலம் பெயர்ந்து வாழும் அந்தந்த நாடுகளில் ஆட்சி அதிகாரங்களில் உள்ள அரசுக்கு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் தரப்பு பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவ்வாறான போராட்டங்கள் சர்வதேசத்தில் வலுவடைந்து வரும் நிலையில் அதனை கோழைத்தனமாக முறியடிக்க சிங்கள தேசம் உண்மைக்கு மாறான பொய்யான பரப்புரைகளையும், போராட்டங்களையும் செய்ய முற்படுகின்றது.
அந்தவகையிலே தான் ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிய பாதையில் புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மக்கள் நீதி வேண்டிய போராட்டத்தில் தங்கள் மக்களுடைய நியாயமான கருத்துக்களை அந்த நாட்டு அரசுக்கு அவர்களது மொழியிலே எடுத்துரைத்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இப்போராட்டம் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.