21 மீட்டர் ஆழத்தில் மூழ்கிய கப்பல்! மன்னிப்பு கோரும் மேலாளர்
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் கடலில் மூழ்கிய சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பல் நிறுவனத்தின் மேலாளர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்த சம்பவம் வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு “ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும்” கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கொள்கலன் கப்பல் 25 தொன் நைட்ரிக் அமிலம் உட்பட 1,486 கொள்கலன்களை ஏற்றிச்சென்ற போது, 2021, மே 20 அன்று இலங்கையின் மேற்கு கடலில் தீப்பரவலுக்கு உள்ளானது.
இதனையடுத்து 10 நாட்களுக்கும் மேலாக இலங்கை இந்திய கடற்படையினர் போராடி தீயை கட்டுப்படுத்திய போதும் கப்பலில் ஏற்பட்ட கடல் நீர் கசிவினால் அது கடலில் மூழ்கியது.
இந்தநிலையில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இலங்கை, இந்திய கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கப்பல் நிறுவனமான, எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ், தனது நிறுவனம் சர்வதேச கொள்கலன் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களின் உதவியை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிய தொடங்கியுள்ளதாகவும், கடற்கரைகளை சுத்தம் செய்வதற்கு "சில கனரக உபகரணங்களை" வழங்கியுள்ளதாகவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கப்பலின் பின் பகுதி 21 மீட்டர் ஆழத்தில் மூழ்கிவிட்டதாகவும், கப்பலின் முன் பகுதியும் “மெதுவாக மூழ்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.