கார்த்திகை வீரர்களை மறந்த ஆளும் தரப்பினர்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டை இன்று ஆளுகின்றவர்கள், நவம்பர் மாதத்தில் நடைபெறும் கார்;த்திகை வீரர்களின் நினைவேந்தலைக் கூட புறக்கணித்துள்ளதாக, ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற இயங்கி வரும் முன்னணி சோசலிஸ கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மறைந்த ரோஹன விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க மற்றும் கார்த்திகை வீரர்கள் என அழைக்கப்படும் அனைத்து ஜே.வி.பி உறுப்பினர்களையும் நினைவுகூரும் வகையில், இன்று(12.11.2024) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ’’நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த ஜேவிபியின் நிறுவனர்கள், நவம்பர் 13 அன்று நினைவுகூருகின்றோம்.
ஜே.வி.பி தலைமை
நவம்பர் 13ஆம் திகதியன்றுதான் தோழர் விஜேவீர கொல்லப்பட்டார். எனினும், 2024 நவம்பர் 13ஆம் திகதி அரசியல் நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், அன்றைய தினத்தில் கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியாதுள்ளது.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் பொதுத் தேர்தலுக்கு முன்னரான அமைதியான காலம் ஆரம்பமாவதால், இந்த நிகழ்வை இன்று நவம்பர் 11ஆம் திகதியன்று நடத்த வேண்டியிருந்தது.
எனினும் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லையா? என்று குமார் குணரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
1971 மற்றும் 1989 ஆகிய இரண்டு காலங்களிலும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த, ஜேவிபியின் மறைந்த வீரர்கள் கற்பித்த சோசலிச பாதையை இன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் ஜேவிபி கட்சியினர் மறந்துவிட்டதாகத் தோன்றுகின்றது.
அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன்; அரசியல் உடன்படிக்கைக்கு செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தோழர் விஜேவீர மற்றும் ஏனையவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணி இன்னும் முடிவடையவில்லை.
2022இல் ஈடுபட்டது போன்ற புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது சவாலாகும். இந்தநிலையில், முதலாளித்துவத்திற்கு தோல்வி, சோசலிசத்திற்கு வெற்றி என்பதே தங்கள் கருப்பொருள்.
கொலைகள் தொடர்பில் விசாரணை
அதேவேளை, 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டு விஜேவீர, கமநாயக்க மற்றும் ஏனையோரின் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் தமது கட்சி எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
1971 மற்றும் 1989 இல் சரணடைந்தவர்களை கொன்றதன் மூலம் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன.
அதேபோன்று வடக்கிலும் உள்நாட்டுப் போரின் போது பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் என்பன இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தையும் விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்களை தண்டிக்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.’’ என குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |