மாமாங்கேஸ்வர ஆலய பிரதம குருக்களின் வீட்டை உடைத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர் கைது
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருக்களின் வீட்டை உடைத்து 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உதவி குருக்கள் ஒருவரே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதம குருக்களின் வீட்டிலிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபாரணங்களை சந்தேகநபரிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள், அவரது மனைவி ஆகிய இருவரும் கொள்ளை சம்பவம் இடம்பெற்ற தினத்தில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டமையை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பெரும் குற்றதர்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆலயத்தின் உதவி குருக்களாக கடமையாற்றி வந்த 29 வயதுடைய கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.